கள்ளிக்குடி பகுதியில் மக்காச்சோளத்தை காலி பண்ணும் காட்டுபன்றிகள் விவசாயிகள் வேதனை

திருமங்கலம், டிச. 2:  கள்ளிக்குடி தாலுகா நேசனேரி, சிவரக்கோட்டை, கரிசல்காளன்பட்டி, செங்கபடை, எஸ்பி நத்தம், கள்ளிக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் மக்காசோளம் பயிரிட்டுள்ளனர். பயிர்கள் நன்கு வளர்ந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இரவுவேளைகளில் கண்மாய்களில் பதுங்கியிருக்கும் காட்டுபன்றிகள் வயல்வெளிகளில் புகுந்து மக்காசோளத்தை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டமடைந்துள்ளனர். இதுகுறித்து நேசனேரியை சேர்ந்த விவசாயிகள் மகாலிங்கம், வெள்ளைச்சாமி கூறுகையில், ‘எங்கள் கிராமத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காசோளத்தை பயிர்களை காட்டுபன்றிகள் சேதப்படுத்தியுள்ளன. சுற்றுவட்டார கிராமங்களிலும் இதே நிலை தொடர்கிறது. பூபூத்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் பயிர்களை பன்றிகள் அழிப்பதால் கடும் நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து வேளாண்மை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை இல்லை. ஒரு சில வடமாநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுபன்றிகளை கொல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் தமிழகத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வனத்துறையினர் காட்டுபன்றிகளை வருவதை தடுக்க வேண்டும்’ என்றனர். 

Related Stories: