பழநி சண்முகாநதியில் முதலை திரிவதாக பீதி வனத்துறை தெளிவுபடுத்த கோரிக்கை

பழநி, டிச. 2: பழநி சண்முகாநதி ஆற்றில் முதலை இருக்கிறதா.. இல்லையா.. என்பதை  வனத்துறையினர் தெளிவுபடுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது ஐயப்ப பக்தர்களும் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள், உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புண்ணிய நதியான சண்முகாநதி ஆற்றில் நீராடிச் செல்வது வழக்கம். இந்நிலையில், சண்முகாநதியில் முதலை திரிவதாக பீதி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வனத்துறை தெளிவு செய்து ஆற்றில் பக்தர்கள் பாதுகாப்பாக நீராட வழிவகை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார் கூறியதாவது: கடந்த ஆண்டு சண்முகாநதி பெரியாவுடையார் கோயில் பகுதியில் முதலை உலவுவதாக பத்திரிக்கைகளில் படத்துடன் செய்தி வெளியானது. வனத்துறையினர் அதை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், பிடிக்க முடியவில்லை. இதனால், அப்பகுதியில் பக்தர்கள் நீராட வேண்டாம் என எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டன. இந்நிலையில் பாலாறு-பொருந்தலாறு அணை மற்றும் வரதமாநதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் சண்முகாநதி ஆற்றில் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் அதிகமாக குளித்து வருகின்றனர். இந்நிலையில், பெரியாவுடையார் கோயில் ஆற்றுப்பகுதியில் சுற்றித்திரியும் முதலைகள் அருகில் உள்ள சண்முகாநதி நீராட்டுப் பகுதிக்கும் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, வனத்துறையினர் தெளிவு படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: