×

காந்திப்பேட்டை அருகே சுற்றுலா பயணிகள் கேத்தி, கொல்லிமலை பள்ளத்தாக்கை கண்டு ரசிக்க காட்சி முனை அமைகிறது

ஊட்டி, டிச. 2: கேத்தி, கொல்லிமலை பள்ளத்தாக்கை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் ஊட்டி அடுத்த காந்திப்பேட்டை அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் காட்சி முனை அமைக்கப்பட உள்ளது. நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால், நாள்தோறும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பூங்காக்களை மட்டும் கண்டு ரசித்து செல்லாமல், இங்குள்ள இயற்கை அழகையும் ரசித்து செல்கின்றனர். இதற்காக, இயற்கை நிறைந்த பகுதிகளை தேடி செல்கின்றனர். இதனால், அனைத்து பகுதிகளிலும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உருவாக்கும் முயற்சியில் அரசு துறைகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கேத்தி பள்ளத்தாக்கை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் விருப்பப்படும் நிலையில், அவர்கள் வாகனங்களை நிறுத்தி கண்டு ரசித்து செல்லும் வகையில், ஊட்டி - குன்னூர் இடையே வேலிவியூ பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் காட்சி முனை அமைக்கப்பட்டுள்ளது.

சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த காட்சி முனை அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி கேத்தி பள்ளத்தாக்கை கண்டு ரசித்து செல்கின்றனர். தற்போது, இதே கேத்தி பள்ளத்தாக்கை கண்டு ரசிக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் காந்திப்பேட்டை அருகேயுள்ள கொல்லிமலை சாலை சந்திப்பு பகுதியில் காட்சி முனை அமைக்கப்படவுள்ளது. இதற்காக, இப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. பணிகள் முடிந்தவுடன் கேத்தி மற்றும் கொல்லிமலை பள்ளத்தாக்கை கண்டு ரசிக்க அனுமதியளிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பகுதியில் சாலை மிகவும் குறுகலாக இருந்த நிலையில், வாகனங்கள் ஒன்றிற்கு ஒன்று இடம் விட்டு செல்வதில் சிரமம் இருந்து வந்தது. இதனால், ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், அனைத்து வாகனங்களும் இடையூறு இன்றி செல்ல முடியும். மேலும், இங்கு காட்சி முனை அமைக்கப்படும் நிலையில், சுற்றுலா பயணிகளுக்கும் ஒரு புதிய அனுபவம் கிடைக்க வாய்ப்புள்ளது.

Tags : Kathi ,Gandhipet ,valleys ,
× RELATED தொட்டபெட்டாவில் பனிமூட்டம் இயற்கை...