×

வேட்டவலம் அருகே தனித்தனி விபத்தில் 3 பேர் படுகாயம்

வேட்டவலம், டிச.2: வேட்டவலம்- விழுப்புரம் சாலையை சேர்ந்தவர் வேங்கையம்மாள்(70), இவர் நேற்று முன்தினம்  அங்குள்ள அய்யனார் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது பின்னால் வந்த மினி லாரி மோதியதில் படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதேபோல், வேட்டவலம் அடுத்த காட்டுநல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தை சேர்ந்தவர் ராஜிவ்காந்தி(30), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 29ம் தேதி காலை பைக்கில் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினார். இலுப்பந்தாங்கல் அருகே வந்தபோது எதிரே வந்த கார், மோதியதில் படுகாயம் அடைந்த அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சஜய்குமார்(41), இன்ஜினியர். கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் இவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பார்வையிட கடந்த 29ம் தேதி காரில் வந்தார்.வேட்டவலம் அடுத்த ஆவூர் அருகே வரும்போது பின்னால் வந்த கார், சஜய்குமார் காரின் பின்பக்கத்தில் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். காரும் சேதமானது. அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த விபத்துகள் குறித்த புகார்களின்பேரில், வேட்டவலம் எஸ்எஸ்ஐக்கள் பன்னீர்செல்வம், தனசேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Vettavalam ,accident ,
× RELATED வேட்டவலம் அருகே கிராம மக்கள் பீதி:...