×

கடலூர் தலைமை தபால் நிலையம் முற்றுகை மா.கம்யூ- போலீசாரிடையே தள்ளுமுள்ளு 10 போலீசார் உள்பட 16 பேர் காயம்

கடலூர், டிச.2: டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கடலூரில் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதில் 10 போலீசார் உள்பட 16 பேர் காயமடைந்தனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவாக கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் முன் முற்றுகை போராட்டம் நடத்த நேற்று காலை மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மா.கம்யூ கட்சியினர் திரண்டனர். மாநில குழு உறுப்பினர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்பையன், மருதவாணன், சுப்பராயன், நகர செயலாளர் அமர்நாத்  உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். தலைமை தபால் நிலைய வாயிலை நோக்கி அவர்கள் சென்றபோது  போலீசார் பேரிகாட் அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்பினர் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக சாலையில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். உடன் அவர்கள் தபால் நிலையத்தை மீண்டும் முற்றுகையிட்டனர்.உடனே போலீசார் அவர்களை தடுத்ததால் மீண்டும் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த  கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரிகார்டை வேகமாக தள்ளிய போது தேவநாதன் என்ற போக்குவரத்து காவலரின் தலையில் பட்டு காயமடைந்தார். தொடர்ந்து தள்ளு, முள்ளு நடந்ததில் 10 போலீசார் காயமடைந்தனர், சுப்பராயன் உட்பட 6 கம்யூனிஸ்ட் கட்சியினர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக மா.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அதில் 5 பேரை கைது செய்தனர்.

Tags : Cuddalore ,siege ,Post Office ,policemen ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!