பாலியல் புகார் அளித்த மகளிரணி நிர்வாகி நீக்கம் விழுப்புரம் மாவட்ட பாஜ தலைவர் அறிவிப்பு

விழுப்புரம், டிச. 2: பாலியல் புகார் அளித்த பாஜ மகளிர் அணி நிர்வாகியை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி விழுப்புரம் மாவட்ட பாஜ தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட பாஜக மகளிரணி பொதுச்செயலாளர் காயத்திரி நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் மாவட்ட பாஜ தலைவர் முன்னாள் எம்எல்ஏ கலிவரதன் அறிமுகமானார். பின்னர் சிறிது நாட்களுக்கு பிறகு பாஜகவில் பொறுப்பு வாங்கித் தருகிறேன் என்று என்னிடம் கூறியதால் கலிவரதனிடம் கடனாக 3 தவணைகளில் ரூ. 5 லட்சம் கொடுத்தேன். ஒரு சமயம் சென்னையிலிருந்து நான் காரில் வந்து கொண்டிருக்கும் போது என்னை வழிமறித்து காரில் ஏற்றிச்சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி மிரட்டி வீடியோ எடுத்து வைத்துள்ளார். இந்த வீடியோவையும், படத்தையும் பலருக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டி வருகிறார்.

கடனாக கொடுத்த ரூ.5 லட்சம் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டேன். அதற்கு அவர் உன்னையும் உன் குடும்பத்தையும் கொன்று விடுவேன் என மிரட்டுகிறார். எங்கள் உயிருக்கு பயந்து இந்த புகார் மனு அளிக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் தன் மீது புகார் அளித்த காயத்திரி, மாவட்ட பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மாநில பாஜ தலைவர் ஒப்புதலுடன் அவரை நீக்கியுள்ளதாக மாவட்ட தலைவர் கலிவரதன் தெரிவித்துள்ளார்.

Related Stories: