ஏர் கலப்பை பேரணியில் விவசாயிகள் திரளாக பங்கேற்க வேண்டும்

சுரண்டை டிச.1  மத்திய பாஜ அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் நடத்தும் ஏர்கலப்பை பேரணியில் திரளான விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டுமென தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது: மத்திய பாஜ அரசு விவசாயிகளை வஞ்சிக்கும் விதமாகவும், பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் புதியதாக 3 விவசாய சட்டங்களை கொண்டு வந்துள்ளது.  விவசாயிகளை பாதிக்கும் இந்த கறுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் வேண்டுகோள்படி இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மாபெரும் போராட்டங்களை நடத்தி வருகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வழிகாட்டுதலில் நாளை (டிச.2) காலை 9 மணி அளவில் தென்காசி மாவட்டம், சுரண்டையில் உள்ள சிவகுருநாதபுரம் இந்து நாடார் திருமண மண்டபத்தில் இருந்து தொடங்கும் ஏர்கலப்பை பேரணி பஸ் ஸ்டாண்ட் ரோடு வழியாக வந்து சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள காமராஜர் வணிக வளாகத்தின் முன்பு நிறைவடைகிறது. மத்திய பாஜ அரசுக்கும், அதற்கு துணைபோகும் தமிழக அரசுக்கும் பாடம் புகட்டும் விதமாக காங்கிரஸ் நடத்தும் இந்த ஏர்கலப்பை பேரணியில் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றிய, நகர, பேரூர், வட்ட காங்கிரஸ்  நிர்வாகிகளும் இந்த பேரணியில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: