×

குலசையில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மீனவ மக்கள் எதிர்ப்பு கலெக்டரிடம் மனு வழங்கல்

தூத்துக்குடி, டிச.1: குலசேகரனம்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க  எதிர்ப்பு தெரிவித்துள்ள மணப்பாடு மீனவ மக்கள் இதுகுறித்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.  மணப்பாடு ஊர் நலக்கமிட்டி தலைவர் ஆன்ட்ரூஸ் தலைமையில் செயலாளர் ஜீவன்,  பொருளாளர் கபிரியேல் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு விவரம்: எங்கள் பகுதியில் அமையவுள்ள குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்,  உடன்குடி அனல்மின் நிலைய திட்டம் மற்றும் நிலக்கரி இறங்கு துறைமுகம் போன்ற  திட்டங்களினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், கடலை நம்பி வாழ்ந்து  வரும் மீனவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

 குறிப்பாக ராக்கெட்  ஏவுதளம் அமையும்பட்சத்தில் இந்தப்பகுதி முழுவதும் ராணுவ மயமாகி விடுவதுடன்  பொதுமக்கள் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்படும். இதுபோன்று பாதுகாப்பு  காரணங்களை காரணம்  காட்டி மீனவர்கள் கடலில் சென்று மீன் பிடிக்கவும்,  அவர்களின் தொழிலை செய்யவும் அனுமதி இல்லாத சூழ்நிலை ஏற்படும். அத்துடன்   மீன்பிடி தொழிலை நம்பி வாழ்ந்து வரும் மணப்பாடு மற்றும் சுற்று வட்டார 21 மீனவ  கிராமமக்களின் வாழ்வு கேள்விக்குறியாகி விடும். இதுதொடர்பாக ஏற்கனவே  நடத்தப்பட்டுள்ள கருத்துக்கேட்பு கூட்டங்கள் தோல்வியில் முடிந்துள்ள  நிலையில், மீண்டும் மாவட்ட நிர்வாகம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தவே  இல்லை.எனவே, கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தாமல் ராக்கெட் ஏவுதளம்  அமைப்பதற்கான நிலஅளவை  பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.  இவ்வாறு மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Anti-Fisheries Collector ,Kulasai ,
× RELATED குலசை கோயிலில் முத்தாரம்மன் சப்பர வீதியுலா