×

ஏடிஎஸ்பி தலைமையில் பூங்கா சாலையில் 300 போலீசார் ஊர்வலம் பாதுகாப்பு யுத்திகள் குறித்த முன்னேற்பாடு

நாமக்கல், டிச.1: நாமக்கல் நகரில் ஏடிஎஸ்பி தலைமையில், 300 போலீசார் திடீரென ஊர்வலமாக சென்றதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று காலை 8 மணியளவில் டிஎஸ்பி காந்தி தலைமையில், இன்ஸ்பெக்டர் செல்வராஜ், எஸ்ஐ தங்கம், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் தலைமையில், நாமக்கல், சேந்தமங்கலம், புதுச்சத்திரம்,மோகனூர் உள்ளிட்ட 10 காவல் நிலையங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐகள், போலீசார் என 300 பேர் திடீரென கையில் லத்தி, தடுப்புகவசத்துடன் (சீல்டு) கூடினார். கலவர நேரத்தில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனம், அதிரடிப்படை வாகனம் ஆகியவையும் பூங்கா சாலைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்களிடையே திடீர் பரபரப்பு ஏற்பட்டது. காலை 8.45 மணிக்கு ஏடிஎஸ்பி ரவிக்குமார் அங்கு வந்தார். இதையடுத்து போலீசார், பூங்காசாலையில் இருந்து அணிவகுத்து பரமத்திரோடு, கோட்டைரோடு, மெயின்ரோடு வழியாக ஊர்வலமாக நடந்து சென்றனர். அவர்களின் பின்னால் போலீஸ்வாகனங்களும் அணிவகுத்து சென்றது. இந்த ஊர்வலத்தில் வந்த போலீசார் எந்த வித பேனர்களையும் பிடித்துசெல்லவில்லை.

 லத்தி, சீல்டுடன்  நடந்து சென்றது மக்களிடையே திடீர் பதட்டத்தை ஏற்படுத்தியது. ஒரே நேரத்தில் 300க்கும் மேற்பட்ட போலீசார் ஊர்வலமாக சென்றதால், கோட்டைரோடு, பரமத்திரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒருவழியாக காலை 9.40மணிக்கு பூங்கா சாலையில் ஊர்வலத்தை நிறைவு செய்து கலைந்து சென்றனர்.எந்த வித விழிப்புணர்வு பேனர்கள், கோஷங்கள் இன்றி போலீசார் நடத்திய ஊர்வலம் பொதுமக்கள் இடையே பதட்டத்தை ஏற்படுத்தியது. குறைந்தபட்சம் ஓபன் மைக்கில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஒருவர் கூட ஊர்வலத்தின் நோக்கம் குறித்து மக்களிடம் விளக்கவில்லை. இது குறித்து நாமக்கல் மாவட்ட எஸ்பி சக்திகணேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சேலம் டிஐஜி பிரதீப்குமார் அறிவுரைபடி, கொரோனா கால கட்டத்தில் பொதுமக்கள் கொரோனாவை எதிர்த்து போராடுவது குறித்தும், சட்ட ஒழுங்கு பிரச்னையின் போது காவல் துறையால் மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் மற்றும் யுக்திகள் குறித்தும், பேரிடர் காலத்தில் துரிதமாக செயல்படுவது குறித்தும், மாதிரி அணிவகுப்பு நாமக்கல்லில் நடத்தப்பட்டது. இவ்வாறு எஸ்பி தெரிவித்துள்ளார்.

Tags : police march ,Park Road ,
× RELATED குடிநீர் வாரிய ஊழியர்கள் போராட்டம்