×

ஆதார் கார்டில் குளறுபடி 39 வயது பெண்ணுக்கு 100 வயது என பதிவு திருத்தம் கோரி கலெக்டரிடம் மனு

தர்மபுரி, டிச.1: தர்மபுரியில் 39 வயது பெண்ணின் ஆதார் கார்டில், 100 வயது என தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை மாற்றக்கோரி கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருகிறார்.தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா சூரப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி சின்னசாமி. இவரது மனைவி சாந்தி(39), நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: நானும், எனது கணவரும் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறோம். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 5 வருடங்களுக்கு முன், எனக்கு ஆதார் அடையாள அட்டை எடுத்தேன். அதில், பிறந்த ஆண்டு 1921 என்றும், வயது 39க்கு பதில் 100 என்றும் தவறாக பதிவு செய்யப்பட்டிருந்தது. வயதை தவறாக பதிவு செய்துள்ளதால், அரசு நலத்திட்டங்கள் எதையும் என்னால் பெற முடியவில்லை.

எனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை வைத்து,  வங்கியில் பயிர்க்கடன் வாங்க விண்ணப்பித்த போது, ஆதார் அட்டையில் தவறாக உள்ளது என கூறி, கடன் வழங்க மறுத்து விட்டனர். இதேபோல் மகளிர் சுய உதவிக்குழுவிலும் உறுப்பினராக சேர்க்க மறுக்கின்றனர். தவறான பதிவை திருத்த இ-சேவை மையத்தில் 3 முறை முயன்றும் முடியவில்லை. எனது வயதிற்கான மருத்துவ சான்றிதழ் சமர்ப்பித்தும், ஆதார் அட்டையில் உள்ள பிழையை திருத்த முடியவில்லை. எனவே, எனது ஆதார் அடையாள அட்டையில் உள்ள பிழையை திருத்தி தர, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Collector ,
× RELATED கிராம மக்கள் கலெக்டரிடம் மனு