×

எண்ணெய் குழாய் திட்டம் செயல்படுத்த எதிர்ப்பு: விவசாயிகள் கூட்டமைப்பு காத்திருப்பு போராட்டம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை

தர்மபுரி, டிச.1: பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஐ எண்ணெய் குழாய் திட்டத்தால் பாதிக்கப்படும் தர்மபுரி மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது.  விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பொன்னையன் துவக்கவுரையாற்றினார். செயற்குழு உறுப்பினர்கள் துளசிமணி, பெருமாள், ராமமூர்த்தி, சோலை அர்ச்சுனன், சின்னசாமி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தேவராசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குமார், கிருஷ்ணகிரி விவசாய சங்க மாவட்ட செயலாளர் பழனி, தர்மபுரி மாவட்ட தலைவர் மல்லையன், மாநில செயலாளர் டில்லிபாபு, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் விஸ்வநாதன், மாதேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஆர்டிஒ (பொ) தணிகாசலம் ஆகியோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விளைநிலங்கள் வழியாக குழாய் பதிப்பு வராது. நெடுஞ்சாலை ஒரத்தில் குழாய் பதிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பின் கலைந்து சென்றனர். விவசாயிகள் கூறுகையில், ‘கோவை மாவட்டம் இருகூரிலிருந்து திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வழியாக பெங்களூரு தேவனகுந்தி வரை எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் விவசாய நிலங்களில் தொடங்கப்பட உள்ளதை தவிர்க்க வேண்டும். சாலை ஓரம் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும்,’ என்றனர்.


Tags : implementation ,Farmers Federation ,struggle officials ,
× RELATED பணியிடங்களில் பெண்களை பாதுகாக்கும்...