×

நல்லம்பள்ளி தாலுகாவில் நிதி நிறுவனத்தினர் பல லட்சம் மோசடி

தர்மபுரி, டிச.1: நல்லம்பள்ளி தாலுகாவைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: நல்லம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட இண்டூர், தளவாய் அள்ளி, மாரியம்பட்டி,  போயர் தெரு, சோமன அள்ளி, ராஜா கொல்லி அள்ளி, நாகலாபுரம் ஆகிய கிராமங்களில் வசித்து வருகிறோம். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன், தர்மபுரி அரசு மருத்துவமனை அருகே ஒரு தனியார் நிதி நிறுவனத்தில், மாதாந்திர சீட்டாக ₹200 முதல் ₹1100 வரை பணம் செலுத்தி வந்தோம். ஐந்தரை ஆண்டுகள் முடிந்த பின்பு அசலும், வட்டியும் தருவதாக நிதி நிறுவனத்தினர் கூறினர். ஆனால், முதிர்வு காலம் முடிந்த பின்பு, பலமுறை கேட்டும் பணத்தை தரவில்லை. எங்களுடைய அசல் ஆவணங்களையும் அவர்கள் வாங்கிக்கொண்டனர்.

இந்த நிறுவனத்தில் எங்கள் பகுதியில் மொத்தம் 130 பேர் வரை பணம் செலுத்தி பல லட்சம் ஏமாற்றப்பட்டதாக தெரிகிறது. எனவே, அந்த நிதி நிறுவனத்திடம் இருந்து எங்களது முதிர்வு தொகையை வட்டியுடன் பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. அதே போல் நல்லம்பள்ளியை சேர்ந்த ஜெயந்தி, கலெக்டரிடம் கொடுத்த புகார் மனு: எனது கணவர் கணேசன் மாற்றுதிறனாளி. நான் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களது சொத்தை, அபகரிக்கும் நோக்கத்தில் எனது உறவினர்கள் வீடு கட்டி வருகின்றனர். இதை தட்டி கேட்ட போது என்னையும், எனது கணவரையும் தாக்கினர். எனவே, எனது குடும்ப சொத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து  பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நல்லம்பள்ளியை சேர்ந்த தமிழ்மன்னன், ஊர்பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: நல்லம்பள்ளி தாலுகா, மானியதள்ளி கிராமத்தில் அரசு நிலத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி கடந்த 50 வருடங்களாக குடியிருந்து வருகிறோம். நாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்க கோரி, பலமுறை மனு செய்துள்ளோம். இதையொட்டி பாளையம் உள்பட்ட நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தார் ஆகியோரால் புல தணிக்கை செய்தும், எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. எங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இதேபோல், அதியமான்கோட்டை வடக்கு தெரு கொட்டாவூரை சேர்ந்த மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனு: வடக்கு தெரு கொட்டாவூரில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இக்கடைக்கு தினமும் ஏராளமானோர் மது குடிக்க வருகின்றனர். இதனால், இப்பகுதி பெண்கள் அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த டாஸ்மாக் கடைகளை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

செம்மாண்டகுப்பம் ஊராட்சி முத்துப்பட்டி பகுதி மக்கள் கொடுத்த மனுவில், எங்களது ஊராட்சியில் 9 கிராமங்கள் உள்ளன. இதில் செம்மாண்டகுப்பம், எஸ்.கொட்டாவூர் ஆகிய ஊர்களுக்கு மட்டும் தொடர்ந்து 100 நாள் வேலை வழங்கப்படுகிறது. எங்கள் கிராம பெண்களுக்கு 5 நாட்களுக்கு ஒரு முறையே வேலை வழங்கப்படுகிறது. எனவே, எங்கள் கிராமத்திற்கு 100 நாள் வேலை திட்ட பணி ஒதுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : institutions ,Nallampalli ,
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரியில் 17வது ஆண்டு விழா