மணப்பாறை அருகே பரபரப்பு பிரதமரின் காப்பீடு திட்ட கார்டுக்கு ரூ.100 வசூலிப்பு

மணப்பாறை, நவ.30: மணப்பாறை அருகே பிரதமரின் காப்பீடு திட்ட கார்டு பெற்றுத்தருகிறேன் என 57 பேரிடம்  தலா ரூ.100 வசூலித்த ஆசாமி போலீசிடம் சிக்கினார். மணப்பாறையை அடுத்த முத்தபுடையான்பட்டியில் பிரதமர் காப்பீடு திட்ட கார்டு போட்டு தருகிறேன் என்று பொதுமக்களிடம் மர்ம நபர்கள் சிலர் தலா ரூ.100 சட்டத்திற்கு புறம்பாக வசூல் செய்வதாக பாஜகவின் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் சித்தாநத்தம் சுப்ரமணிக்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார் வந்தது.

இதனையடுத்து பாஜகவின் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் கோபால கிருஷ்ணன் மற்றும் ஒன்றிய செயலாளர் பாலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தபோது அங்கு தேங்காய்தின்னிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவர் இரண்டு பெண்களுடன் பிரதமர் காப்பீடு திட்ட கார்டு, லேமினேசன் செய்து தருவதாக அப்பகுதி மக்களிடம் 100 ரூபாய் வசூல் செய்து கொண்டிருந்தார்.

இதனையடுத்து மணப்பாறை டிஎஸ்பி., பிருந்தாவிற்கு புகார் சென்றதையடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் பேரில் மணப்பாறை சப்-இன்ஸ்பெக்டர் சதிஸ்குமார் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். அதில் சுமார் 57 பேரிடம் கணேசன் பணம் வாங்கியது தெரிய வந்தது. போலீசாரின் விசாரணைக்கு பின்னர் கணேசன் பணத்தை திருப்பி தர ஒப்புக்கொண்டார். இதனையடுத்து 57 நபர்களிடம் பெற்ற பணத்தை கணேசன் போலீசார் முன்னிலையில் திருப்பிக் கொடுத்தார். இந்த சம்பவத்தையொட்டி அங்கு ஏராளமான பெண்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: