×

முதல் போக பாசனத்திற்காக மஞ்சளாறு அணை திறப்பு


தேவதானப்பட்டி, நவ. 30: தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையிலிருந்து, முதல்போக பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.  தேவதானப்பட்டி அருகே, மேற்கு தொடர்ச்சிமலை கொடைக்கானல் அடிவாரத்தில் மஞ்சளாறு  அணை உள்ளது. 57 அடி உயரமுள்ள இந்த அணையின் மொத்த கொள்ளளவு 487.35 மி.கன அடி. இந்த அணை மூலம் தேனி மாவட்டத்தில் 3148 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டத்தில் 2111 ஏக்கர் என மொத்தம் 5259 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. பழைய ஆயக்கட்டில் 3386 ஏக்கர், புதிய ஆயக்கட்டில் 1873 ஏக்கர் பாசன வசதி பெறும். ஆண்டுதோறும் அக்.15ல் பாசனத்திற்காக அணை திறக்கப்படும். ஆனால், நடப்பாண்டில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வரட்டாறு, இருட்டாறு, தலையாறு, மஞ்சளாறு ஆகிய இடங்களில் மழை தாமதமாக பெய்தது.

இதனால், முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு தாமதமானது. சமீபத்தில் பெய்த மழையால் நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்தது. இதையடுத்து முதல் போக பாசனத்திற்காக, அணையிலிருந்து தண்ணீரை கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று திறந்து விட்டார். அப்போது பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர்  சினேகா,  தாசில்தார் ரத்தினமாலா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்  கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர்கள் சேகரன்,  கண்ணன், தேவதானப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன்,  அதிமுக மாவட்ட  செயலாளர் சையதுகான், பெரியகுளம் ஒன்றியச் செயலாளர்கள் செல்லமுத்து,  அன்னபிரகாஷ் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

Tags : Opening ,Manjalaru Dam ,
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு