×

கார்த்திகை பெருவிழாவையொட்டி மீனாட்சி கோயிலில் லட்ச தீபம்

மதுரை, நவ. 30: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை தீப பெருவிழாவையொட்டி, கோயில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. கொரோனா காலம் என்பதால் கோயிலில் குறைந்த அளவில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை பெருவிழா நவ.24ம் தேதி துவங்கியது. டிச.3ம் தேதி வரை இவ்விழா நடக்கிறது. இந்த 10 நாட்களும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் காலை, மாலை இரு வேளைகளில் ஆடி வீதிகளில் புறப்பாடாகி எழுந்தருளி வருகின்றனர். கார்த்திகை பெருவிழாவான நேற்று மாலை 4 மணிக்கு அம்மன், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்வித்து, சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.

கொரோனா காலம் என்பதால் சமூக இடைவெளியுடன் குறைந்த அளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு மீனாட்சி கோயிலில் பொற்றாமரைக்குளம், அம்மன் சுவாமி சன்னதிகள், கொடிமரங்கள் பகுதி, கோசாலை, ஆடிவீதிகள், கோயில் உட்பிரகாரம் உள்ளிட்ட அனைத்துப்பகுதிகளிலும் லட்ச தீபங்கள் ஏற்றி, சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. தீப ஒளியில் மீனாட்சி கோயில் பகுதிகள் பேரழகில் ஜொலித்தன. இரவு 7 மணியளவில் மீனாட்சி சுந்தரேஸ்வர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, கீழமாசி வீதி அம்மன் தேரடி, சுவாமி சன்னதி தேரடி அருகே பூக்கடை தெரு ஆகிய இடங்களுக்கு எழுந்தருளினர். இங்கு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியிலும் பக்தர்கள் கலந்து கொண்டு, வழிபாடு செய்தனர்.ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், இணைகமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்திருந்தனர். கார்த்திகை பெருவிழாவையொட்டி மீனாட்சி கோயில் வளாகப்பகுதியிலும், நகர் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Laksha ,occasion ,festival ,Meenakshi temple ,Karthika ,
× RELATED இரவு நேரங்களில் ரயில்வே...