×

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் அலுவலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

ஈரோடு,நவ.30:இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் நடத்தும் அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கருணாகரன் தெரிவித்துள்ளார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனருமான கருணாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஈரோடு கலெக்டருமான கதிரவன் முன்னிலை வகித்தார்.

இதில்  வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கருணாகரன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் (தனி) ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் 9 லட்சத்து 36 ஆயிரத்து 277 ஆண் வாக்காளர்களும், 9 லட்சத்து 80 ஆயிரம் 437 பெண் வாக்காளர்களும், 95 இதர வாக்காளர்களும் என மொத்தம் 19 லட்சத்து 16 ஆயிரத்து 809 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் தொடர்பான வாக்காளர்களிடம் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்ய கடந்த 21, 22ம் தேதிகளில் நடைபெற்ற சிறப்பு சுருக்க திருத்த முகாம்களில் அந்தந்த பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களின் மூலம் சுமார் 42 ஆயிரத்து 133 படிவங்கள் பெறப்பட்டுள்ளது.

மேலும் படிவம் 6, படிவம் 7, படிவம் 8 மற்றும் படிவம் 8(யு)ன் கீழ் விண்ணப்பித்து உள்ளவர்களின் படிவங்களை முறையாக ஆய்வு மேற்கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர், சேர்த்தல், நீக்குதல் தொடர்பான பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், டிசம்பர் 12, 13ம் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்ய சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடக்க உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சிறப்பு சுருக்க திருத்த முகாமில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய படிவங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான இளங்கோவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, கோபி ஆர்.டி.ஓ., ஜெயராமன், தேர்தல் தாசில்தார் சிவகாமி உட்பட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Election officials ,
× RELATED தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற...