×

திருட்டு, கொள்ளை சம்பவங்களில் துப்பு துலக்க குமரியில் பழைய குற்றவாளிகள் விபரங்களை சேகரிக்கும் தனிப்படை

நாகர்கோவில், டிச.1: குமரி மாவட்டத்தில் தொடர் திருட்டு, ெகாள்ளை சம்பவங்களில் துப்பு கிடைக்காத நிலையில், பழைய குற்றவாளிகள் பற்றிய விபரங்களை தனிப்படை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.குமரி மாவட்டத்தில் சமீப காலங்களாக திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. வழிபாட்டு தலங்கள், கடைகள், டாஸ்மாக் கடைகள் மற்றும் ஆள் இல்லாத வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. சமீபத்தில் மேக்காமண்டபம் இலஞ்சிவிளை பகுதியைச் சேர்ந்த வின்ஸ் ஸ்டீபன் (63) என்பவர், வெளிநாட்டில் இருந்து வரும் தனது மகனை அழைத்து வருவதற்காக குடும்பத்துடன் சென்னை சென்று இருந்தார். இரு நாட்கள் கழித்து வந்த போது அவரது வீட்டில் ஜன்னல் கம்பியை வளைத்து, 70 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதே போல் ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி, தென்தாமரைக்குளம், சுசீந்திரம், களியக்காவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள், கடைகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் தொடர் ெகாள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்த ெகாள்ளை சம்பவங்களில் இதுவரை துப்பு துலங்கவில்லை. குமரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் துப்பு துலக்க நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், தக்கலை ஆகிய 4 துணை போலீஸ் சரகங்களில் தனித்தனி தனிப்படைகள் உள்ளன. இவர்கள் கொள்ளை, கொலை சம்பவங்களில் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்கள்.  சமீபத்தில் நடந்த கொள்ளை சம்பவங்களில் கண்காணிப்பு கேமிராவில் சிக்கிய கொள்ளையர்களை அடையாளம் காண தனிப்படைகள் முயற்சியில் இறங்கினர். இதில் 2, 3 கொள்ளை சம்பவங்களில் சிக்கிய கொள்ளையர்கள் உருவம், பழைய குற்றவாளிகளாக இருக்கலாமா? என்று சந்தேகிக்கப்படுகிறது.

அந்த அடிப்படையில் பழைய குற்றவாளிகள் பற்றிய விபரங்களை சேகரித்து வருகிறார்கள். சம்பவ இடங்களில் பதிவான கைரேகைகளை பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள்.பழைய குற்றவாளிகள் யாராவது தலைமறைவாகி உள்ளார்களா? சிறையில் இருந்த குற்றவாளிகளில் சமீபத்தில் வெளியே வந்தவர்கள் யார், யார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே குமரி மாவட்டத்தில் சமீப காலமாக வட மாநில கொள்ளையர்களின் ஊடுருவலும் அதிகமாக உள்ளது. வியாபாரிகள், தொழிலாளர்கள் போர்வையில் உள்ளே  நுழைந்துள்ள கொள்ளையர்கள், குமரி மாவட்டத்தில் ஆங்காங்கே கைவரிசை காட்டி வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : offenders ,robbery ,Kumari ,theft ,
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து