×

புதிய புயல் முன்னெச்சரிக்கை குமரியில் 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பவில்லை

நாகர்கோவில், டிச.1: புதியதாக புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பாத நிலை ஏற்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் நிலை உள்ளது. இது புயலாக மாறி இலங்கையை கடந்து குமரி கடல் பகுதியில் நிலைநிற்கும் சூழல் காணப்படுகிறது. இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் இருந்து மீனவர்கள் யாரும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் அல்லது அருகில் உள்ள துறைமுக பகுதிக்கு கரை திரும்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வரும் நாட்களில் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் டிசம்பர் 1ம் தேதி 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 70 கி.மீ வேகத்திலும் தென்மேற்கு வங்க கடல், மன்னார்வளைகுடா, கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்று வீசும். டிசம்பர் 2ம் தேதி தென்மேற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா, கன்னியாகுமரி கடல் பகுதியில் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர். தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம், கொச்சி துறைமுகம் பகுதியில் மீனவர்கள் கரை திரும்ப வேண்டியுள்ளது. தூத்தூர் மண்டலத்தில் மட்டும் 750 படகுகளுக்குமேல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு உள்ளது. இதில் சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை, இரயுமன்துறை, இரவிபுத்தன்துறை, மார்த்தாண்டன்துறை ஆகிய கிராமங்களை சேர்ந்த 387 விசைப்படகுகள் இன்னும் கரை திரும்ப வேண்டிய நிலையில் உள்ளது என்று கூறப்படுகிறது. இதனை போன்று குளச்சல், முட்டம் பகுதிகளில் இருந்து ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்களும் கரை திரும்ப வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது.இவர்களுக்கு தகவல்கள் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த வகையில் 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்ப வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு விசைப்படகிலும் 15 முதல் 20 மீனவர்கள் வரை தொழிலுக்கு சென்றுள்ளனர்.

Tags : Kumari ,
× RELATED குமரியில் 4 இடங்களில் முகாம்...