×

நாகர்கோவிலில் சாலைகளை சீரமைக்க கோரி திமுக ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், டிச.1: நாகர்கோவில் மாநகர சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி திமுக சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. பாதாள சாக்கடை திட்டம், கூட்டு குடிநீர் திட்டம் போன்றவற்றுக்கு தோண்டப்பட்ட சாலைகளில் உள்ள பள்ளங்கள் மூடப்படாத நிலை உள்ளது. இதனால் அவற்றில் மழை நீர் தேங்கி போக்குவரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.புதியதாக தார் வைத்து சீரமைக்கப்பட்ட சாலைகளும் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் -வெட்டூர்ணிமடம் -பார்வதிபுரம் சாலை, செட்டிக்குளம்-இருளப்பபுரம் சாலை, ராமன்புதூர்-குருசடி சாலை, செட்டிக்குளம்-சவேரியார் கோயில் சாலை என்று பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாலைகள் அகலப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் அகற்றப்பட வில்லை. சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் சாலைகள் சீரமைக்கப்படாததால் அந்த இடங்கள் மீண்டும் ஆக்ரமிக்கப்பட்டு வருகிறது.

பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், திமுக சார்பில் நாகர்கோவில் மாநகர பகுதியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக 31 வது வட்ட திமுக சார்பில் நாகர்கோவிலில் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகராஜா கோயில் திடலில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 31வது வட்ட பொறுப்பாளர் முன்னாள் கவுன்சிலர் சாகுல்ஹமீது தலைமை வகித்தார்.

குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்எல்.ஏ போராட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். வட்ட பிரதிநிதிகள் கார்த்திக், ரஞ்சித், தொண்டரணி பாலா, இளைஞரணி சி.டி.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகர்கோவில் மாநகர திமுக செயலாளர் வக்கீல் மகேஷ், மகளிர் தொண்டர் அணி செயலாளர் ஹெலன்டேவிட்சன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லைசெல்வம், அணி அமைப்பாளர்கள் உதயகுமார், பன்னீர்செல்வம், சுரேந்திரகுமார், ஜெசிந்தா, பொதுக்குழு உறுப்பினர் ஷேக்தாவுது, பெஞ்சமின், நகர துணை அமைப்பாளர் வேல்முருகன், முன்னாள் கவுன்சிலர்கள் சீதாமுருகன், அமல்ராஜ் மற்றும் சந்திரசேகர், ஜியாவுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : protests ,DMK ,roads ,Nagercoil ,
× RELATED சென்னையில் திமுகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !