×

புதுவையில் ஏலச்சீட்டு மோசடியை கண்டித்து அடகுகடையை பொதுமக்கள் திடீர் முற்றுகை

புதுச்சேரி, டிச.1: புதுச்சேரி முத்தியால்பேட்டையில் ஏலச்சீட்டு பணமோசடியை கண்டித்து அடகுகடையை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி, குமரகுருபள்ளத்தை சேர்ந்தவர் சஞ்சய்குமார்(56). இவர் முத்தியால்பேட்டை மற்றும் புஸ்சிவீதி மணிக்கூண்டு அருகே சிட்பண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவிக்கவே, புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அரசு ஊழியர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் அவரிடம் மாதாந்திர ஏலச்சீட்டு மட்டுமின்றி குலுக்கல் பரிசு சீட்டும் கட்டியதாக கூறப்படுகிறது.புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு கடலூர், திண்டிவனத்திலும் தனது கிளைகளை சஞ்சய்குமார்  விரிவாக்கம் செய்ததால் ஏராளமான வாடிக்கையாளர் இதில் சேர்ந்து பணம் கட்டினர். இதனிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக இந்நிறுவனம் சில மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு சஞ்சய்குமார் திடீரென மாயமானார்.இதையடுத்து வாடிக்கையாளர்கள் அவரது வீட்டிற்கு சென்றபோது, வீட்டை காலி செய்து தலைமறைவாகிவிட்டது தெரியவரவே அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ஒதியஞ்சாலை காவல் நிலையம் சென்று மோசடி தொடர்பாக முறையிட்டனர். இருப்பினும் அவர் மீது  நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த வாடிக்கையாளர்கள் ேநற்று மதியம் முத்தியால்பேட்டை, மார்க்கெட் எதிரே சஞ்சய்குமாரின் நெருங்கிய உறவினர்கள் வைத்திருக்கும் நகை அடகு கடையை திடீரென முற்றுகையிட்டனர்.

முன்கூட்டியே தகவல் கிடைத்தால் சஞ்சய்குமாரின் உறவினர்கள் யாரும் அங்கு வராத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய கோடிக்கணக்கிலான பணத்தை காவல்துறை மீட்டுத்தர வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவல் கிடைத்து விரைந்து வந்த முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், எஸ்ஐ ரமேஷ் தலைமையிலான போலீசார் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து முற்றுகையை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். அப்போது போராட்டக்குழுவினர், இந்த மோசடி தொடர்பாக கவர்னர் கிரண்பேடியை சந்தித்து முறையிட உள்ளதாக தெரிவித்தனர்.

Tags :
× RELATED புதுவையில் புதிதாக 31 பேருக்கு தொற்று