×

விழுப்புரத்தில் பரபரப்பு ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தவர்களை அடித்து, உதைத்து வேனில் ஏற்றிய போலீசார்

விழுப்புரம், டிச. 1: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் அதிகாரிகள் மனு வாங்கிக் கொண்டிருந்தனர். விக்கிரவாண்டி தாலுகா ராதாபுரம் புதுநகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன்கள் கணேசன், பாரிவள்ளல். இவர்களுக்கு சொந்தமாக கட்டப்பட்டு பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் அவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலத்தை பாகப்பிரிவினை செய்யாமல் இருக்கிற நிலையில் நிலத்துக்கு செல்லும் பொது வழிப்பாதையை அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர், ஆக்கிரமித்து கொண்டதோடு நிலத்துக்கு செல்லும் பாதையை தடை ஏற்படுத்தி வருகிறார். இதனால் கணேசன், பாரிவள்ளல் ஆகியோர் தங்களது விவசாய நிலத்துக்கு சென்று பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுபற்றி அவர்கள் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும், கோரிக்கை மனுக்களை கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கணேசன், பாரிவள்ளல் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் நேற்று ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து அங்குள்ள நுழைவுவாயில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது எங்கள் நிலத்துக்கு செல்லக்கூடிய பாதையை ஆக்கிரமித்தவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து வழிப்பாதை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறி ெதாடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசு ஆவணங்களான ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மின்னணு ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களும் தங்களுக்கு தேவையில்லை என்று கூறி அவற்றை வீசினர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. நீண்ட நேரமாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், கேட்காததால் அவர்களை குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். அப்போதும் அவர்கள் கலைந்து செல்லாததால், அடித்து, உதைத்து போலீஸ் வேனில் ஏற்றி காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விசாரணைக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Tags : riot collector ,Villupuram ,
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...