×

விழுப்புரம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமையாக வைத்திருந்த உரிமையாளர் மீது நடவடிக்கை பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் புகார்

விழுப்புரம், டிச. 1: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்தது. இதில் விக்கிரவாண்டி உட்கோட்டம் மாதா கோயில் தெருவை சேர்ந்த அற்புதமேரி என்பவர் தன் கணவர் அருளப்பன் மற்றும் அவரது 3 பிள்ளைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி ஈச்சங்குப்பம் பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு 3 பிள்ளைகள். குடும்ப வறுமையின் காரணமாக வேறு வழியின்றி பாக்கம் கூட்ரோடு சாலையிலுள்ள சேட்டு என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் 80,000 பெற்றுக்கொண்டு எனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் ஜனவரி மாதம் 20ம் தேதியில் இருந்து செங்கல் சூளையில் வேலை செய்து வந்தோம். செங்கல் சூளை உரிமையாளர், நாங்கள் செங்கல் தயாரித்த பின்னர் இதர நேரங்களில் எங்களை அவர் சொந்த வேலைகளான வீட்டு வேலை, தோட்ட வேலை மற்றும் வயல் வேலை உள்ளிட்ட வேலைகளை செய்ய சொல்லி எங்களை துன்புறுத்தினார்.

மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி கட்டாயப்படுத்தி வேலை வாங்கி வந்தார். அங்கு எங்களுக்கு சரியான உணவு இல்லை, தூய்மையான குடிநீர் வசதியும் இல்லை. இதனால் எங்கள் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.கொரோனா காலக்கட்டத்தில் எங்களை வீட்டுக்கு அனுப்பாமல் வேலைகளை செய்ய சொல்லி துன்புறுத்தி வந்தார். நாங்கள், வாங்கிய கடன் அடைந்த பிறகும் வீட்டுக்கு போக விடாமல் கொத்தடிமைகளாக எங்களை பயன்படுத்தி வந்தார். மேலும் சூளை உரிமையாளரே எங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் தர வேண்டியுள்ளது. இந்த பணத்தை கேட்டால் உங்களை கொன்று விடுவேன் என மிரட்டுகிறார். எங்களுக்கு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. எங்களை கொத்தடிமைகளாக வைத்திருந்த சூளை உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

Tags : Victims ,owner ,Collector ,brick kiln ,Villupuram ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...