ஏரிக்கால்வாய்கள் தூர்வாராத அதிகாரிகளை கண்டித்து எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் திடீர் சாலைமறியல் போலீசாருடன் வாக்குவாதம்; பள்ளிகொண்டாவில் பரபரப்பு

பள்ளிகொண்டா, டிச.1: ஏரிக்கால்வாய்கள் தூர்வாராத அதிகாரிகளை கண்டித்து பள்ளிகொண்டாவில் எம்எல்ஏ நந்தகுமார் தலைமையிலான திமுகவினர் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் இருந்து பாலாற்று தண்ணீரை சதுப்பேரி மற்றும் பொய்கை, செதுவாலை உள்ளிட்ட ஏரிகளுக்கு திருப்பிவிடும் பணியை அணைக்கட்டு திமுக எம்எல்ஏ நந்தகுமார் நேற்று முன்தினம் முதல் செய்து வருகிறார். ஆனால் இதற்கு அதிகாரிகள் எவ்வித ஒத்துழைப்பும் தரவில்லையாம். இதனால் தனது சொந்த செலவில் ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பிவிடும் பணியை எம்எல்ஏ மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஏரிக்கால்வாய்களை தூர் வாராமல் இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் நேற்று காலை சுமார் 10 மணியளவில் எம்எல்ஏ நந்தகுமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், பள்ளிகொண்டா போலீசார் சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு அங்கு வந்து மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது போலீசார், எம்எல்ஏவை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர், அதிகாரிகள் ஏரிக்கால்வாய்களை தூர்வாரி தண்ணீரை திருப்பிவிட நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில், சுமார் 1 மணி நேரம் கழித்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

இதையடுத்து எம்எல்ஏ நந்தகுமார், பள்ளிகொண்டாவில் உள்ள மோர்தானா கால்வாய் தூர்வாரப்பட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.கேப்சன்...ஏரிக்கால்வாய்கள் தூர்வாரப்படாததை கண்டித்து பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் தலைமையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர்.

Related Stories:

>