×

போலீசார் விசாரணையில் நீளும் பட்டியல் சிறுமி பலாத்கார வழக்கில் டிவி நிருபர் கைது: பாஜ பிரமுகருடன் தொடர்பு அம்பலம்

தண்டையார்பேட்டை: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தனியார் டிவி நிருபர் கைது செய்யப்பட்டுள்ளார். தண்டையார்பேட்டையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி வன்கொடுமை தொடர்பாக கடந்த 10ம் தேதி, தண்டையார்பேட்டையை சேர்ந்த மதன்குமார் (35), ஷாகிதா பானு (22) உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய முத்துபாண்டி உள்ளிட்ட 6 பேர் மற்றும் பாஜ பிரமுகர் ராஜேந்திரன் (44) ஆகியோர் தலைமறைவாக இருந்த நிலையில் அடுத்தடுத்து அவர்களும் கைது செய்யப்பட்டனர்.இதில் ராஜேந்திரன் அளித்த வாக்குமூலத்தில், அவரது நண்பரும், எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டருமான புகழேந்தி பலமுறை அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் புகழேந்தியை கைது செய்து விசாரித்தபோது, சிறுமியை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்ைக எடுக்கப்பட்டு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து, சிறுமி பலாத்கார விவகாரத்தில் தொடர்புடைய மண்ணடியை சேர்ந்த அசாருதீன் (32), சிராஜூதீன் (35) ஆகியோரை கடந்த 21ம் தேதி போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொருக்குபேட்டையை சேர்ந்த பெண் புரோக்கர் பாட்ஷாவை பிடித்து போலீசார் விசாரித்தபோது, சிறுமி பலாத்கார சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், இதில் தொடர்புடையவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 5 தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், தண்டையார்பேட்டை வினோபா நகரை சேர்ந்த தனியார் டிவி நிருபரும், கோணி வியாபாரியுமான வினோபா ஜி (38) என்பவரும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

விசாரணையில், டிவி நிருபர் வினோபாஜிக்கும், பாஜ பிரமுகர் ராஜேந்திரனுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்தது. இவரிடம் தீவிர விசாரணை நடத்தினால் மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது. மேலும்,  சிறுமி பாலியல் பலாத்காரத்தில் பல முக்கிய பிரமுகர்கள் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : TV reporter ,BJP ,
× RELATED விவசாயிகள் புதிய தொழில் நுட்பங்களை...