×

திருக்கார்த்திகை தீப திருவிழா குமரி மாவட்ட கோயில்களில் சொக்கபனை கொளுத்தப்பட்டது; வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு

நாகர்கோவில், நவ. 30 : தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நட்சத்திர தினத்தன்று திருக்கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குமரி மாவட்ட கோயில்கள், வீடுகளில் விளக்கேற்றி கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று திருக்கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோயில்கள், வீடுகளில் தீப அலங்காரங்கள் செய்யப்பட்டன. நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு அனந்தகிருஷ்ணன் திருவீதி உலாவுக்கு எழுந்தருளினார். பின்னர் ரதவீதியில் வீதிஉலா வந்தார். தொடர்ந்து நாகராஜா கோயில் திடலில் சொக்கபனை கொளுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  

இதுபோல் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலய சுவாமி கோயிலில் நேற்று இரவு அம்பாள் அன்னவாகனத்திலும், பெருமாள் கருட வாகனத்திலும், முருகர் மயில் வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.தொடர்ந்து சொக்கபனை கொளுத்தப்பட்டது. கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் திருக்கார்த்திைகை தீப விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 4 மணிக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழகத்திற்கு சொந்தமான தனி படகில் கோயில் மேல்சாந்தி, அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு உறுப்பினர் அழகேசன், கோயில் மேலாளர் ஆறுமுகநைனார் ஆகியோர் விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றனர். பின்னர் அங்குள்ள கன்னியாகுமரி பகவதி அம்மன் பாதமண்டபத்தில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பாதமண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலய குளத்தின் முன்பு விளக்குகள் ஏற்றப்பட்டது.

கன்னியாகுமரி அருகே உள்ள 1800 அடி உயர மருந்துவாழ்மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. மருந்துவாழ்மலையில் உள்ள பரமார்த்தலிங்கபுரம் சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், வழிபாடு, அன்னதானம் போன்றவை நடந்தது. இதனை போன்று வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், வடசேரி கிருஷ்ணசுவாமி கோயில், பறக்கை மதுசூதனபெருமாள் கோயில், பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில், கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் உள்பட பல கோயில்களிலும் கார்த்திகை தீப விழா கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுவதும் வீடுகளின் வாசல் முன்பு பெண்கள் வண்ண கோலமிட்டும், அகல் விளக்குகள் ஏற்றியும் கார்த்திகை தீபத்திருவிழாவை கொண்டாடினர். கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கோயில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags : Thirukarthikai Deepa Festival ,temples ,district ,Kumari ,homes ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு