×

விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயலில் 9,947 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் 1024 வீடுகள் பாதித்ததாக ஆட்சியர் தகவல்

விழுப்புரம், நவ. 30:  தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிவர் புயல் காரணமாக விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை நிவர்புயலையொட்டி, மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், தொடர் மழை மற்றும் பலத்த காற்றினால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளன. அதன்படி, வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் வருவாய்த்துறை இணைந்து சேதமடைந்த பயிர்கள் மற்றும் கால்நடைகள் உயிரிழப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தினர். அதேபோல், மின்வாரியம் சார்பில் எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது போன்ற விவரங்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளனர்.  அதன்படி, நிவர் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு பெண் உயிரிழப்பும், 71 ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நிவர் புயலின் கோரத்தாண்டவத்தில் 1024 வீடுகள் சேதமடைந்துள்ளன. 2047 கோழிகள் உயிரிழந்துள்ளது என கால்நடைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், புயலின்போது 520 மரங்கள் சாலையில் முறிந்தும், வேறோடு சாய்ந்தும் கிடந்ததை, தயார் நிலையில் இருந்த மீட்புக்குழுவினர் உடனடியாக சென்று அதனைவெட்டி அகற்றியுள்ளனர்.  இதேபோல், 4008 ஹெக்டேர் நெல்பயிர்களும், 3748 ஹெக்டேர் உளுந்து, 448 ஹெக்டேர் கடலை, 67 ஹெக்டேர் கரும்பு, 650.05 ஹெக்டேர் தோட்டக்கலைபயிர்கள், ஆரம்பகட்ட பயிர்கள் 1026.3 ஹெக்டேர் என மொத்தம் 9,947 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, புயலின் போது 532 மின்கம்பங்களும், 54 மின்மாற்றிகள், 33 மின்கம்பிகள் சேதமடைந்துள்ளதை, மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சரிசெய்து, சீரான மின்விநியோகத்தை ஏற்படுத்தியுள்ளனர். புயல் உருவான நாள் முதல் 587 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, 10,146 குடும்பங்களை சேர்ந்த 28,576 பேர் முகாம்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Tags : district ,Villupuram ,houses ,storm ,
× RELATED 14 நாட்களில் மக்களவை தேர்தல் பறக்கும்படை தொய்வின்றி பணியாற்ற வேண்டும்