×

புதுவையில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி ரத்து முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

புதுச்சேரி, நவ. 30: புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரியை ரத்து செய்வதென முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரியில் மூடப்பட்ட மதுக்கடைகளில் இருந்து கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் 89 மதுக்கடைகள், 10 சாராயக்கடைகள், 3 கள்ளுக்கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. மேலும், கலால்துறை துணை ஆணையர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர், ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, மே 25ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

புதுச்சேரியில் 920 மது வகைகள் உள்ளன. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 154 பிராண்டுகள் ஒரே மாதிரியாக உள்ளன. இந்த 154 பிராண்டுகளுக்கு தமிழகத்துக்கு நிகராக புதுச்சேரியிலும் வரி விதிக்கப்பட்டது. சில பிராண்டுகளுக்கு 200 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டது. மற்ற பிராண்டுகளுக்கு அடக்க விலையிலிருந்து 25 சதவீதம் கோவிட் வரி போடப்பட்டது. மேலும், கள் மற்றும் சாராயத்திற்கு 20 சதவீதம் கோவிட் வரி விதிக்கப்பட்டது. 3 மாதங்களுக்கு விதிக்கப்பட்ட கோவிட் வரி, கடந்த ஆகஸ்ட் வரை முடிவடைந்த நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு அதாவது நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. புதுச்சேரியில் மதுபான விலையில் கொரோனா வரி காரணமாக பல மடங்கு உயர்ந்ததால் மது பிரியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் இருந்து மது குடிப்பதற்காக வருபவர்களின் எண்ணிக்கை முழுவதுமாக சரிந்தது. இதனால் புதுச்சேரியில் மது விற்பனை கடும் சரிவை சந்தித்தது.

மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கொரோனா வரி இன்றுடன் (30ம் தேதி) முடிவடையும் நிலையில் புதுச்சேரியில் அந்த வரியை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து சட்டசபை வளாகத்தில் கடந்த 27ம் தேதி முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், தலைமை செயலர் அஸ்வனிகுமார், நிதித்துறை செயலர் சுர்பிர்சிங் மற்றும் அதிகாரிகள் கலந்து ெகாண்டனர். வரி விதிப்பை நீட்டித்தால் அரசுக்கு கூடுதல் வரி கிடைக்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், கூடுதல் வரி விதிப்பால் மதுபான விற்பனை சரிந்துள்ளதால், கொரோனா வரியை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர்கள் கூறினர். இதனால் அக்கூட்டத்தில் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று முதல்வர் தலைமையில் மீண்டும் கூட்டம் கூடியது. இதில் மதுபானங்களுக்கு கொரோனா வரியை ரத்து செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. தொடர்ந்து, இதற்கான கோப்பு, கவர்னர் கிரண்பேடியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Tags : Corona ,New Delhi ,Chief Minister ,meeting ,
× RELATED சிறு, குறு, நடுத்தரத் தொழில்...