×

மலை மீது அமைந்துள்ள பெருமுக்கல் ஈஸ்வரன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது திரளான பக்தர்கள் தரிசனம்

திண்டிவனம், நவ. 30: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பெருமுக்கல் சஞ்சீவி மலை மேல் அமைந்துள்ள முக்தியாஜல ஈஸ்வரர் கோயிலில் நேற்று 1008 லிட்டர் நெய் தீபம் ஏற்றப்பட்டது. திண்டிவனம்- மரக்காணம் சாலையில், பெருமுக்கல் கிராமத்தில் சஞ்சீவி மலை மேல் பிரசித்தி பெற்ற முக்தியாஜல ஈஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நெய் தீபம் ஏற்றப்படுவது வழக்கம். நேற்று கார்த்திகை தீப பெருவிழாவை முன்னிட்டு, மாலை 5 மணிக்கு, முக்தியாஜல ஈஸ்வரருக்கு, பால், பன்னீர், தயிர், மோர், நெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக முக்தியாஜல ஈஸ்வரர் விபூதி அலங்காரத்தில் காட்சி அளித்தார். பின்னர் நந்தியின் முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு, சிவன் பாடல்கள் முழங்க, ல சிவஜோதி மோனசித்தர், 1008 லிட்டர் நெய் கொண்டு 7 அடி உயர கொப்பரையில் கார்த்திகை மகா தீபத்தை ஏற்றி வைத்தார். இந்த மகாதீபத்தை சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பெருமுக்கல் கிராம மக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Karthika ,hill ,Perumukkal Eeswaran Temple ,
× RELATED தீபம் தொண்டு நிறுவனம் சார்பில்...