×

காவேரிப்பாக்கம் ஏரிக்கு 2 ஆயிரம் கன அடி நீர்வரத்து ஒரு வாரத்தில் நிரம்ப வாய்ப்பு

காவேரிப்பாக்கம், நவ.30: காவேரிப்பாக்கம் ஏரிக்கு நிவர் புயலால் ெபய்த தொடர் மழை காரணமாக 2,000 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 3வது பெரிய ஏரியாகவும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெரிய ஏரியாகவும் காவேரிப்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு சுமார் 3,968 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது.  இந்த ஏரி ஒரு முறை நிரம்பினால் மட்டும் விவசாயிகள் 3 போகம் அறுவடை செய்யலாம் என்பது இந்த ஏரியின் சிறப்பு தன்மை. இந்த ஏரி நிரம்பி வழியும் காலங்களில் நரிமதகு, சிங்கமதகு, மூலமதகு, பள்ளமதகு, உள்ளிட்ட 10 மதகுகள் வாயிலாக, கால்வாய் மூலம் நேரடியாக தண்ணீர் பெறப்பட்டு சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படுகின்றன. தற்போது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையின் காரணமாகவும், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், காவேரிப்பாக்கம் அடுத்த அணைக்கட்டு பகுதியில் இருந்து ஏரிக்கு சுமார் 2 ஆயிரம் கண அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. இதனால் ஏரியில் தற்போது 22 அடி அளவுக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. இதே நிலை நீடித்தால் ஏரி முழு கொள்ளளவான 30 அடியை ஒரு வாரத்தில் எட்டி விடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், நேற்று ஏரியின் மூலமதகு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கால்வாய் மூலம் நீர் வரத்து, தற்போது இருப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். அப்போது செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன், உதவி பொறியாளர் சந்திரன், உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags : Kaveripakkam Lake ,
× RELATED தண்ணீரை தேக்காமல்...