×

இன்று கடைசி நாள் பயிர்காப்பீடு தேதியை நீட்டிக்க வேண்டும்

சாயல்குடி, நவ.30: ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரி எனப்படும் பருவ மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது. இதில் நெல் முக்கிய பயிராகவும், மிளகாய், சோளம், குதிரை வாலி உள்ளிட்ட சிறுதானியங்கள், வெங்காயம், நிலக்கடலை, பயறு வகை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள், எள் உள்ளிட்ட எண்ணெய் வித்துகள் உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது. கடந்த காலங்களில் தொடர்மழையின்றி வறட்சியால் விவசாயம் பொய்த்து போனது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு கடன் ஏற்பட்டது. இதனால் விவசாய பணிக்காக வாங்கிய பணத்திற்கு வட்டி கட்டமுடியாமலும், வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகளை திருப்ப முடியாமல் பல சிரமங்களுக்கு ஆளாகினர்.

இந்நிலையில் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிர்காப்பீடு இழப்பீடு தொகை விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. இந்த திட்டம் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக அமைக்கிறது.
மாவட்டத்தில் பிரதான பருவமழையான, வடகிழக்கு பருவமழை ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் துவங்கும், அதனை எதிர்பார்த்து விவசாயிகள் உழவார பணிகளை செய்தனர். அப்போது பெய்த மழைக்கு விவசாயிகள் நெல், சிறுதானிய விதைகளை விதைத்தனர். மிளகாய் நாற்றுகள் வளர்க்கப்பட்டது. ஆனால் ஒரு மாத காலத்திற்கு மேலாக தொடர் மழை பெய்ய வில்லை. இதனால் மாவட்டத்தில் கடலாடி, முதுகுளத்தூர், சாயல்குடி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகள் வீணாகி போனது.

இந்நிலையில் பருவமழை அக்.28ம் தேதி முதல் கால தாமதமாக பெய்து வருகிறது. மழைக்கு விவசாயிகள் இண்டாவது முறையாக விவசாய பணிகளை மேற்கொண்டனர். மழை பெய்தாலும் கூட பெரும்பாலான கண்மாய், குளங்கள் முழுமையாக நிறையவில்லை. கனமழையால் சில இடங்களில் பயிர்கள் தண்ணீர் மூழ்கி, விவசாயம் அழிந்து போனது. நவ. 30ம் தேதி (இன்று) வரை பயிர்காப்பீடு செய்ய காலஅவகாசம் இருந்தும், நிவர் புயல், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நவ.25ம் தேதிக்குள் பயிர்காப்பீடு செய்ய வேளாண்மை துறை அறிவுறுத்தியது. ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகாகளிலும் வி.ஏ.ஓகள் பற்றாக்குறை உள்ளது. இதனால் விவசாய இடத்தில் பயிர்களை கள ஆய்வு செய்து, பயிர்காப்பீடு செய்வதற்கு தேவையான பட்டா10(1), சிட்டா, அடங்கல் போன்ற சான்றுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள், பயிர்காப்பீடு செய்யப்படும் ஆன்லைனில் பதிந்து வருவதால், வங்கிகள், இ.சேவை மையங்கள், தனியார் கணினி சென்டர்களிலும் சர்வர் முடங்கி வருகிறது. இதனால் நேற்று வரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிய முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே பயிர்காப்பீடு செய்வதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க பயிர் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு பரிந்துரை செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பயிர் காப்பீட்டுத்தொகை பெற்று...