×

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா; அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பால் வெறிச்சோடியது

திருவண்ணாமலை, நவ.30: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபவிழா உற்சவத்தின் 10ம் நாளான நேற்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீப விழா நடந்தது. ஆதியும், அந்தமும் இல்லாத பரம்பொருளான இறைவன் ஒருவனே. நிலம், நீர், காற்று, ஆகாயம், பூமி எனும் பஞ்ச பூதங்களையும் அரசாளுகிற இறைவன், ஏகனாகவும் அதே நேரத்தில் அனேகனாகவும் அருள்புரிந்து, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் 5 காரியங்களையும் நிறைவேற்றுகிறார். ஏகன் அநேகனாக அருள்பாலிக்கும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில், பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அதையொட்டி, நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து அண்ணாமலையார் கோயிலில் பரணி தீப வழிபாடு நடந்தது. அண்ணாமலையாருக்கு சந்தனம், வாசனை எண்ணெய், மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், திருநீறு, இளநீர், சொர்ணபுஷ்பம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, தங்க நாகாபரணம் சாற்றி, வண்ண மலர்மாலைகள் அணிவித்து நிவேதனம் செய்யப்பட்டது. கருவறையில் அண்ணாமலையாருக்கு அபிஷேகம் நடைபெற்றபோது, அதிகாலை 4 மணி அளவில், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ எனும் பக்தி முழக்கத்துடன் சுவாமி சன்னதியில் ஒரு மடக்கில் சிவாச்சாரியார்கள் தீபத்தை ஏற்றினர். அந்த தீபத்தை கொண்டு ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து, கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. மேலும், அண்ணாமலையார் சன்னதியில் இருந்து வைகுண்ட வாயில் வழியாக தீபமலை நோக்கி பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் காண்பித்து வழிபட்டனர்.
பரணி தீப விழாவில், அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் சந்தீப் நந்தூரி, எஸ்பி அரவிந்த், டிஆர்ஓ ரத்தினசாமி, மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோயில் இணை ஆணையர் ஞானசேகர், முன்னாள் நகராட்சி தலைவர் இரா.தரன், திமுக மருத்துவர் அணி மாநில துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள்நகர் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, பரணி தீப விழாவை தரிசிக்க கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கவில்லை. கோயில் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும் பரணி தீப விழாவில், கோயிலுக்குள் சுமார் 7 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிப்பது வழக்கம். ஆனால், நேற்று பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கோயில் பிரகாரங்கள் கூட்டமின்றி காணப்பட்டது.

Tags : Karthika Fire Festival ,Thiruvannamalai ,Annamalaiyar temple ,Devotees ,
× RELATED திருவண்ணாமலையில் பங்குனி மாத...