×

தடுப்பணை நிர்வாக அனுமதியை உடனடியாக வழங்க வேண்டும் பஞ்சாயத்து தலைவர்கள் வலியுறுத்தல்

சாயல்குடி, நவ.30: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பணைகளுக்கு நிர்வாக அனுமதி, வேலைக்கான ஆணை உள்ளிட்டவற்றை உடனடியாக ஊராட்சி செயலர்களிடம் வழங்க வேண்டும் என பஞ்சாயத்து தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய நீர் வழித்தடங்கள், மழைநீரை சேமிக்க கூடிய கண்மாய், குளங்கள் இருந்தும், அவை போதிய பராமரிப்புகள் இன்றி தூர்ந்து போய் கிடக்கிறது. மழை காலங்களில் பெருக்கெடுத்து ஓடி வரும் மழைநீரை சேமிக்கவும், மழைநீர் வீணாகி ஓடுவதை தடுத்து, தேங்கி நிற்கின்ற தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தவும், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும் கிராமங்களில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தடுப்பணைகள் கட்டப்படுகிறது. விவசாய நிலங்கள் அதிகமாக உள்ள பகுதிக்கு அருகே செல்கின்ற ஆறு, கால்வாய், ஓடை போன்ற நீர் வழித்தடங்களில் இந்த தடுப்பணைகள் கட்டப்படுகிறது.

மாவட்டத்தில் மானாவாரி எனப்படும் பருவமழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யப்படும் நிலை இருந்து வருகிறது. இதனால் மழைநீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்தவும், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தில் தமிழக அரசு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கூடுதல் எண்ணிக்கையிலான தடுப்பணைகளை வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு சில யூனியன்களை தவிர்த்து, மாவட்டம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 200க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு தடுப்பணைக்கு ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் வரை நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு சிலரின் தலையீட்டால் அதனை பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு வழங்காமல் மாவட்ட நிர்வாகம், யூனியன் நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் தடுப்பணைகளை கட்டாததால் தற்போது பெய்து வரும் மழைக்கு மழைநீரை சேமிக்க வழியின்றி வீணாகி வருகிறது. மேலும் நூறுநாள் வேலை திட்டத்தில் தடுப்பணை அமைக்கும் பணி நடக்கிறது. இதற்கு நூறுநாள் வேலை பணியாளர்களின் கணக்கு பதிவேடு அட்டை, வருகை பதிவேடு பயன்படுத்தப்படுகிறது. கட்டிட வேலை தெரியாததால் பெரும்பான்மையான பணியாளர்களை வேலைக்கு பயன்படுத்துவது கிடையாது. இதனால் அத்திட்டத்தில் மற்ற வேலைகளை பார்த்து வரும், அந்த பணியாளர்களுக்கு உரிய வேலை நாட்கள் கிடைக்காமல், கூலியை இழக்கும் நிலை உள்ளது என புகார் எழுந்துள்ளது.

பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு நிர்வாகி ஒருவர் கூறும்போது, மாவட்டத்தில் குறிப்பிட்ட அளவு தடுப்பணைகள் வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டுள்ள வேலைகளுக்கு 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கமிஷன் கேட்டு, ஒரு சிலர் நிர்பந்தம் செய்கின்றனர். சிலரின் தலையீட்டு காரணமாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தடுப்பணைக்குரிய நிர்வாக அனுமதி, வேலைக்குறிய ஆணை உள்ளிட்டவற்றை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
கடந்த ஜூலை, அக்டோபர் மாதம் வழங்கக் கூடிய ஆணையை வழங்கியிருந்தால் பெரும்பாலான இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்க கூடும். இதனால் தற்போது பெய்து வரும் மழைநீர் சேமிக்கப்பட்டிருக்க கூடும், விவசாயத்திற்கு பயன்பட்டிருக்கும். ஆனால் வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். இதனால் மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்படாமல் கிடப்பில் கிடக்கிறது.

தற்போது மழை பெய்து வருவதால் உடனடியாக பணிகளை துவங்க முடியாது. மழைக்காலம் முடிந்தவுடன் விரைவாக பணிகளை துவங்கும் நிலை உள்ளது. எனவே தடுப்பணைக்குரிய நிர்வாக அனுமதியை உடனடியாக வழங்க வேண்டும். வேலைக்கான எஸ்டிமேட் வழங்கி ஜியோடேக் எடுக்க ஒன்றிய உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்களுக்கு உத்திரவிட வேண்டும். வேலை துவங்குவதற்கான ஆணை ஆகியவற்றை ஊராட்சி செயலர்களின் பெயரில் உடனடியாக வழங்க கலெக்டர், திட்டஇயக்குனர்(கூடுதல் கலெக்டர்) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Panchayat leaders ,dam administration ,
× RELATED கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் கூட்டம்...