×

20 ஆண்டுகளுக்கு பிறகு பரவை கண்மாய் நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை, நவ. 30: மதுரையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பரவை கண்மாய் நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் நெடுஞ்சாலையில் சமயநல்லூருக்கு முன்பாக பரவை கிராமம் உள்ளது. புராதன வரலாற்று சிறப்புடன் தொடர்புடைய இக்கிராமத்தில் இன்றும் காணப்படும் சில கற்சிலைகள் உள்பட ஆவணங்கள் சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலத்திற்கான ஆதாரங்களை காட்டி வருகின்றன. இந்த ஊருக்கு பரவை என்னும் பெயர் ஏற்பட்டதற்கு பின்னணியில், சோழ அரசவையில் இருந்த பெண்ணின் பெயர் இருப்பதாக அங்குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. மேலும், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கருப்பு, சிவப்பு மண்பானை ஓடுகள் பரவை கண்மாயின் உள்வாய் பகுதியில் பெருமளவு கிடைத்திருக்கின்றன.

இதேபகுதியில், பிற்கால பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தை சேர்ந்த பெருமாள் கோயில் சிற்பம் கண்மாயின் கலிங்கோடு சேர்த்து கட்டப்பட்டுள்ளது. பரவை கண்மாயின் கலிங்கிலும், முதல்மடையிலும் உள்ள கல்வெட்டுகளில் பரவையின் பெயர் “பரவை நங்கை நல்லூர்” என காணப்படுகிறது.இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பரவையில், நீர்காத்த பெருமாள் கண்மாய் உள்ளது. தற்போது சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த கண்மாய் நிரம்பி வழிகிறது. இதுகுறித்து பரவை கிராமத்தை சேர்ந்த செந்தில் கார்மேகம் கூறுகையில், `` தேனூர், தோடனேரி, சமயநல்லூர் ஆகிய 3 ஊர்களின் கண்மாய்கள் நிரம்பிய பின்பு, கலிங்கில் இருந்து வெளியேறும் தண்ணீர், பரவை கண்மாயை வந்தடையும். என்னதான் தண்ணீர் வந்தாலும், கண்மாய் நிரம்பாது. பலத்த மழை பெய்தால் தான், நீர்காத்த பெருமாள் கோயில் கண்மாய் நிரம்பும். தற்போது, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, பரவை கண்மாய் நிரம்பியுள்ளது. இக்கண்மாய் மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் விளைச்சல் ஏற்படும். கண்மாய் நிரம்பியதால், இக்கண்மாய் மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்” என்றார்.

Tags : spread ,
× RELATED எய்ட்ஸ் நோயை பரப்ப சிறுவனிடம் அத்துமீறல் வாலிபருக்கு 3 ஆயுள் தண்டனை