×

5 நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

பொன்னை, நவ.30: பொன்னை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காட்பாடி ஒன்றியம், பரமசாத்து பெரிய ஊர் கிராமத்தில் 100கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு செல்லும் சாலை கடந்த 4 நாட்களுக்கு முன் நிவர் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் சேதமடைந்தது. மேலும், இப்பகுதியில் கடந்த 4 நாட்களாக மின்சாரம் வழங்கப்படவில்லையாம். அதோடு, கடந்த 5 நாட்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் ெசய்யப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி செயலாளருக்கு தகவல் தெரிவித்தும் அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அப்பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, குடிநீர் வழங்க வலியுறுத்தி, ஊராட்சி செயலார் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். சுமார் 1 மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பின்னர் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தை சேர்ந்தவர் தான் இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் பகுதியில் உள்ள ஓடையை தூர்வார கோரிக்கை விடுத்தோம். ஆனால், அவர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நிவர் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் ஓடையில் ஓடிய வெள்ளத்தில் சுடுகாட்டிற்கு செல்லும் சாலை அடித்து செல்லப்பட்டது. மேலும், எங்கள் பகுதிக்கு கடந்த 5 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்தும் ஊராட்சி செயலாளரிடம் தெரிவித்தும் அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நாங்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறோம். மேலும், ஊராட்சி செயலாளர் எங்கள் கிராமத்தை சேர்ந்தவராக இருந்தும் எங்களின் கோரிக்கையை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறார். மேலும், அரசு பணிகள் ஒன்று கூட எங்கள் பகுதியில் முறையாக நடப்பதில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்கள் பகுதியில் சேதமடைந்துள்ள சுடுகாட்டிற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED வேலூர் அருகே காரில் கடத்தல்: பாஜக...