×

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் சுகாதார சீர்கேடு பயணிகளுக்கு தொற்றுநோய் அபாயம்

வேலூர், நவ.30: வேலூர் பழைய பஸ்நிலைய கழிவறை எதிரே அழுகிபோன குப்பைகளை கொட்டி தரம் பிரித்து எடுப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு தொற்றுநோய் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 45க்கும் மேற்பட்ட திடக்கழிவு மேலாண்மை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் சாலையோரங்களில் இருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டது.
தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் மூலமாக தினமும் வீடுகளுக்கு சென்று மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்து துப்புரவு பணியாளர்கள் பெற்று வருகின்றனர். இவர்கள் குப்பைகளை சேகரித்துக்கொண்டு திடக்கழிவு மேலாண்மை கட்டிடத்தில் கட்டப்பட்டுள்ள, குப்பைகளை உரமாக மாற்றும் இடத்தில் கொட்டி வைக்கின்றனர். இதனால் குப்பை தொட்டி இல்லாத மாநகராட்சியாக உள்ளது. இதற்கிடையில் வேலூர் புதிய பஸ்நிலையம் நவீன பஸ்நிலையமாக கட்டப்பட்டு வருவதால் வேலூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி நினைவு தூண் அமைந்துள்ள பகுதியில் பள்ளிக்கொண்டா, குடியாத்தம், பேர்ணாம்பட்டு ஆகிய ஊர்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியர் பஸ்கள் நிறுத்தப்படுகிறது.

இந்த பஸ் நிறுத்தம் பின்பகுதியில் ஆண், பெண்களுக்கான தனித்தனி கழிவறை வசதி உள்ளது. பயணிகள் வந்து செல்லும் இடத்தில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வீடுகளில் இருந்து சேகரித்து வரும் குப்பைகளை தரம் பிரிக்கின்றனர்.
அழுகி நிலையில் உள்ள குப்பைகளால் அந்த பகுதி தூர்நாற்றம் வீசுகிறது. காலை நேரங்களில் எடுத்து வந்து கொட்டுவதால் அந்த பகுதி குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. பயணிகள் மூக்கை பிடித்து கொண்டு ஓட்டம் பிடிக்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பயணிகளுக்கு நோய் தொற்று அபாயம் உருவாகி உள்ளது.  எனவே மாநகராட்சி நிர்வாகம் இந்த பகுதியில் குப்பை பிரிக்கும் பணியை நடத்த கூடாது என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : bus stand ,passengers ,Vellore ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை