×

வேலூர் மாவட்டத்தில் மலைகளில் கார்த்திகை மகா தீபம்

வேலூர், நவ.30: கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் மற்றும் கோட்டை மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஏகன் அனேகனான இறைவன் ஒளிப்பிழம்பானவன். ஒளியான அக்னியில் இருந்தே அனைத்தும் தோன்றின என்ற தத்துவத்தை விளக்கும் கார்த்திகை தீப விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. அதேபோல் திருப்பரங்குன்றம் உட்பட அனைத்து மலைகளிலும் மகா தீபம் ஏற்றப்பட்டது.   வேலூரில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து இன்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து மாலை 6 மணியளவில் கோயில் ராஜகோபுரத்தின் மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மேலும் கோயில் சிவாச்சாரியார்கள் சொக்கப்பனை கொளுத்தினர்.  

தொடர்ந்து வேலூர் ஓல்டு டவுன் கோட்டை மலை, சைதாப்பேட்டை மலை மீது பக்தர்கள் அரோகரா முழக்கங்களுடன் தீபம் ஏற்றினர். அதோடு நகரில் அம்மணாங்குட்டை காசிவிசுவநாதர் கோயில், சுக்கையவாத்தியார் தெரு காசி விசுவநாதர் கோயில், ஓடைபிள்ளையார் கோயில் சொர்ணபுரீஸ்வரர் கோயில், அரியூர் ஜோதீஸ்வரர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்ததுடன், மாலையில் தீபம் ஏற்றப்பட்டது. அதேபோல் சத்துவாச்சாரி, ரங்காபுரம், தீர்த்தகிரி மலைகளிலும் அரியூர் திருமலைக்கோடி கைலாசகிரி மலையிலும், மூஞ்சூர்பட்டு மலைகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதுதவிர வேலூர் மாவட்டத்தில் மகாதேவமலை, லத்தேரி பைரவர் மலை, கைலாசகிரி உட்பட பல்வேறு கோயில்களிலும் மலைகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

Tags : hills ,Karthika Maha Deepam ,Vellore district ,
× RELATED பெரும்பாறை மலைப்பகுதியில்...