தீபத்திருநாளையொட்டி திருவானைக்காவல் கோயிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது

திருச்சி, நவ.30: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சொக்கப்பனை நேற்று ஏற்றப்பட்டது. கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திர தினத்தன்று மலை கோயில்களிலும், பவுர்ணமி தினத்தன்று சர்வ ஆலயங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அதன்படி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோயிலில் நேற்று கார்த்திகை தீபத்திருநாள் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாள் அன்று ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி உற்சவர்கள் கார்த்திகை கோபுரம் அருகே உள்ள நாலுகால் மண்டபத்திற்கு வந்தடைவர். பின்னர் அங்கு கார்த்திகை கோபுரத்திற்கும் நாலுகால் மண்டபத்திற்கும் நடுவே பனை ஓலைகளால் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை ஏற்றப்படும். அதனை ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கண்டருளுவர்.

இந்தாண்டு கொரோ னா தடுப்பு நடவடிக்கை காரணமாகவும், அரசு வழிகாட்டுதலின்படியும் கோயிலில் உற்சவர் புறப்பாடு நடைபெறுவதில்லை. இதையொட்டி நடராஜர் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரிக்கு மகாதீபாரதனை காட்டப்பட்டு அங்கிருந்து தீபங்கள் கொண்டு வரப்பட்டு கார்த்திகை கோபுரம் முன் அமைக்கப்பட்டிருந்த பனை ஓலையில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. பின்னர் அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னதி எதிரில் உள்ள பிள்ளையார் சன்னதி பின்புறமும், குபேரலிங்கம் சன்னதி அருகிலும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. கார்த்திகை தீப திருநாளையொட்டி கோயிலில் 3 இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

Related Stories: