அரசின் இருசக்கர வாகனம் பெற தகுதியுடைய மகளிருக்கு அழைப்பு

திருவாரூர் , நவ.30: திருவாரூர் மாவட்டத்தில் 2020-21ம் நிதியாண்டில் தமிழக அரசால் செயல் படுத்தப்படும் உழைக்கும் மகளிருக்கான அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் தகுதியான மகளிர் விண்ணப்பித்து பயன்பெற மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 18 வயது முதல் 45 வயதிற்கு மேற்படாமல் ஆண்டொன்றுக்கு ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் ஊதியம் பெறும் அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத நலவாரியங்களில் பதிவுபெற்ற மகளிர், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மகளிர், சிறுதொழில் புரியும் மகளிர், அரசு திட்டங்களில் பணிபுரியும் மகளிர், ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க பிரதிநிதிகள், தொகுப்பூதியம், தினக்கூலி அல்லது ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் மகளிர், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வங்கி ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரியும் மகளிர் இத்திட்டத்தில் பயன்பெறலாம். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பங்களை அலுவலக வேலை நாட்களில் காலை 10 முதல் மாலை 5.45 மணிவரை தங்கள் பகுதிக்குட்பட்ட அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலங்களில் இலவசமாக பெற்றுககொள்ளலாம். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்திலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Related Stories: