×

அரசு பள்ளி கட்ட 1.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியவருக்கு பாராட்டு

சோமனூர், நவ.30:  சோமனூர் அருகே உள்ள எலச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அரசு மேல்நிலை பள்ளி கட்டிடம் கட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 1.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி உள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. சோமனூர் அருகே உள்ள எலச்சிபாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர் இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் அரசு உயர்நிலைப் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க முன்வந்தார். இதற்கு முன்பாக அவரது தந்தை அப்பகுதியில் உள்ள ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிக்கு 50 சென்ட் நிலத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அரசு பள்ளி கட்டிடம் கட்ட நிலம் தானமாக வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. சோமனூர் மற்றும் கருமத்தம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இதுவரை ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி கூட இல்லை இதனால் இந்தப் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி கட்ட வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. விழாவில் கலந்து கொண்டு பேசிய தொழிலதிபர் ராமமூர்த்தி, வரும் கல்வியாண்டில் எலச்சிபாளையம் நடுநிலை பள்ளியை தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இல்லாததால் ஏழை எளிய மாணவர்கள் இடைநிறுத்தம் செய்வது ஒவ்வொரு கல்வியாண்டிலும் நடைபெற்று வருகிறது. இதைத்தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். இதைத்தொடர்ந்து மரம் நடு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

Tags : government school ,land ,
× RELATED புத்தாக்க பயிற்சியில் தேர்ச்சி ஆசிரியர்களுக்கு பாராட்டு