×

கொல்லம்பாளையம் ரயில்வே பாலத்தில் போக்குவரத்து நெரிசல்

ஈரோடு, நவ. 30: ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஈரோடு ரயில்வே காலனி அருகே கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலம் உள்ளது. இந்த பாலத்தில் காளைமாட்டு சிலை பகுதியில் இருந்து செல்லும் கனரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் இருவழிப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதேபோல், பூந்துறை ரோடு, கரூர் ரோட்டில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் கொல்லம்பாளையம் ரவுண்டானாவில் இருந்து நுழைவு பாலத்தில் ஒரு வழிப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. கனரக வாகனங்கள் ரயில்வே பாலத்தில் மோதும் நிலை இருப்பதால், அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தும் வகையில் இரும்பால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து கரூர், பழனி, மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள், கனரக வாகனங்கள் 80 சதவீதம் இந்த நுழைவு பாலம் வழியாகவே இயக்கப்பட்டு வருகிறது.

இதனால், இந்த நுழைவு பாலத்தில் காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படும். மேலும், நுழைவு பாலத்தில் கனரக வாகனங்களுக்கு தடுக்கும் இரும்பு தடுப்புகளில் அடிக்கடி வாகனங்கள் சிக்கி விபத்திற்குள்ளாவதும் தொடர் கதையாகி வருகிறது. எனவே, கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் அல்லது கொல்லம்பாளையம் பகுதியில் புதிதாக மேம்பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : railway bridge ,
× RELATED பாம்பன் ரயில் பாலத்தில் ‘செல்பி’...