×

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ரூ.11.84 கோடி செலவில் டிஜிட்டல் வீடியோ காட்சி, அருங்காட்சியகம்: டிசம்பர் 3ம் தேதி டெண்டர் திறக்க முடிவு; ஜனவரியில் நினைவிடத்தை திறக்க ஏற்பாடு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ரூ.11.84 கோடி செலவில் டிஜிட்டல் வீடியோ காட்சி மற்றும் அருங்காட்சியகம் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இப்பணிகளை இம்மாதத்துக்குள் முடித்து ஜனவரியில் நினைவிடத்தை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரீனா கடற்கரையில் நினைவிடம் அமைக்க கடந்த 2018ல் தமிழக அரசு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்தது. இதை தொடர்ந்து கடந்த 2018 மே மாதத்தில் கட்டுமான பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.

இதில், கட்டிடத்தின் மையப்பகுதியில் பீனிக்ஸ் பறவை, இடது புறத்தில் அறிவுசார் பூங்கா, வலது புறத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இதை தவிர்த்து நடைபாதை, குடிநீர் வசதி, செயற்கை நீரூற்று உள்ளிட்டவை ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த பீனிக்ஸ் பறவை இறக்கை வடிவமைப்பு பணி கடந்த சில நாட்களுக்க முன்பு முடிவடைந்தது. இதை தொடர்ந்து தான் அறிவுசார் பூங்கா, அருங்காட்சியகம் அமைப்பது, ஜெயலலிதாவுக்கு சிலிக்கான் சிலை வைப்பது, ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் தொடர்பாக மக்கள் அறியும் வகையில் டிஜிட்டல் திரை வசதி ஏற்படுத்துவது, கட்டிடத்தின் முன்புறத்தில் இரண்டு சிங்க சிலை, அதன் நடுவில் ஜெயலலிதா சிலை வைக்கப்படுகிறது.

இதற்காக, ஜெயலலிதா நினைவு மண்டபத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவு பூங்காவில் டிஜிட்டல் வீடியோ காட்சி வைக்க ரூ.11.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் கடந்த நவம்பர் 17ம் தேதி டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டன. தொடர்ந்து டிசம்பர் 3ம் தேதிக்குள் டெண்டர் திறக்கப்பட்டு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, அதன்பிறகு இப்பணிகள் தொடங்கப்படுகிறது. இப்பணிகளை முடித்து ஜனவரியில் நினைவிடத்தை திறக்க ஏற்பாடுசெய்யப்பட்டு வருகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Jayalalithaa ,memorial ,Memorial, Museum: Tender ,
× RELATED மதவாதம், வெறுப்பு அரசியல் தோல்வி...