×

செங்கல்பட்டு நகராட்சி 7வது வார்டில் மின் மோட்டார், கேபிள் பழுதால் தண்ணீரின்றி தவிக்கும் மக்கள்: அதிகாரிகள் அலட்சியம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியில் மின் மோட்டார், கேபிள் பழுதால், 7வது வார்டு மக்கள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். இதனை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர் என புகார் எழுந்துள்ளது. செங்கல்பட்டு நகராட்சியின் 33 வார்டுகளுக்கு தேவையான குடிநீர் முழவதும் செங்கல்பட்டு அடுத்த பழவேலி பாலாற்றில் இருந்து பைப்லைன் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், பழைய தட்டான்மலை குடிநீர் திட்டத்தின் மூலம் 7வது வார்டு கங்கையம்மன் கோயில்தெரு, பச்சையம்மன் கோயில் தெரு, தூக்குமரகுட்டை ஆகிய பகுதிகளில் 2000 குடும்பங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

மேற்கண்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் மின்மோட்டார் மற்றும் கேபிள் ஆகியவை கடந்த 10 நாட்களுக்கு முன் பழுதானது. இதனால் 7வது வார்டு மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதியடைந்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் மூலம் இதுவரை பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்யவில்லை. தற்காலிகமாக லாரி மற்றும் டிராக்கடர்களிலும் தண்ணீர் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நகராட்சி நிர்வாகம், எங்களது தண்ணீர் பிரச்னையை தீர்க்கவில்லை.

மலை பகுதி என்பதால் குடிக்க, குளிக்க சமைக்க தண்ணீர் இல்லாமல் அலைந்து திரிந்து, அருகில் உள்ள திம்மாவரம் ஊராட்சியில் கேன்களில் தண்ணீர் பிடித்து வருகிறோம். மேலும், அதிக விலை கொடுத்து தனியார் வாகனங்களில் விற்கும் தண்ணீரை வாங்கி பயன்படுத்துகிறோம். போதிய குடிநீர் இன்றி குழந்தைகள் முதல் முதியோர் வரை வைத்து கொண்டு சிரமம் அடைகிறோம். ஏற்கனவே புயல் பாதிப்பால் அவதியடைந்த நாங்கள், தற்போது வேலைக்கு செல்லாமல் தண்ணீரை தேடி அலையவேண்டிய நிலை உள்ளது. இதுபற்றி நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும், கண்டு கொள்ளமல் உள்ளனர் என ஆதங்கத்துடன் கூறினர்.

Tags : municipality ,ward ,Chengalpattu ,
× RELATED தொண்டாமுத்தூர் பேரூராட்சி திமுக...