×

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதன்முதலாக சுகர்பிரீ நெல் ரகம் அமோக விளைச்சல் மழையால் கதிர்கள் சாய்ந்து பாதிப்பு

மயிலாடுதுறை நவ.30: அரிசியில் அதிக அளவு குளுக்கோஸ் இருப்பதால் ரத்தத்தில் குளுக்கோசை அதிக அளவில் சேர்த்துவிடும் என்பதால் அரிசி உணவை சர்க்கரை நோயாளிகள் தவிர்த்து வருகின்றனர். எனவே சுகர் பேஷன்ட் எனப்படும் சர்க்கரை நோயாளிகளுக்காக ‘லோ ஜி.ஐ.’எனப்படும் லோ கிளைசெமிக் உணவிற்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஆர்.என்.ஆர். எனப்படும் தெலங்கானா நெல் ரகம். கடந்த 5 ஆண்டிற்கு முன் இதை கண்டுபிடித்த தெலங்கானா மற்றும் ஆந்திராவில் லோகிளைசெமிக் நெல்ரகம் விளைவிக்கப்பட்டு அரிசி விற்பனையில் உள்ளது. இந்த அரிசியை சாப்பிட்டால் ரத்தத்தில் குளுக்கோஸ் சேமிக்கும் விகிதத்தை வெகுவாக குறைக்கிறது என்பதால் இந்த நெல்லுக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நெல் ரகத்தை திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் விவசாயிகள் பயிரிட்டு நல்ல லாபம் அடைந்து வருகின்றனர். முதன்முதலாக இந்த நெல் ரகத்தை மயிலாடுதுறை பகுதிக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். குறுவையில் 120 நாட்களும், சம்பாவில் 140 நாட்களும் என்ற கணக்கில் இதை பயிரிட பரிந்துரை செய்யப்பட்டாலும் குறுவைக்கு இது உகந்ததாக இருக்காது என்பதால் சம்பா மற்றும் தாளடி விவசாயத்தில் இதை பயிரிட முடிவெடுத்து குத்தாலம் அஞ்சலாறு பகுதியில் செல்வம் என்பவர் தனது நிலத்தில் 25 ஏக்கரில் பயிரிட்டுள்ளார்.

25 கி.கி. எடைகொண்ட விதை நெல் ரூ.1,000 விலைக்கு வாங்கினார். இதேபோல் மயிலாடுதுறை, குத்தாலம் பகுதியில் 100 ஏக்கரில் இந்த புதிய நெல் ரகத்தை சம்பா மற்றும் தாளடி பருவத்தில் நட்டுள்ளனர். 155 நாள் பயிர் வகைகளான சி.ஆர்.1009ஐ தாளடி மற்றும் சம்பா பயிராக நட்டபோது அந்த பயிருடன் இந்த ஆர்.என்.ஆர். ரகத்தையும் நட்டதால் 100 நாட்களுக்குள் கதிர் வெளிவந்து முற்றும் நிலை ஏற்பட்டு விட்டது. தற்பொழுது பெய்த நிவர் புயலால் இந்தப்பயிர்கள் பல இடங்களில் சாய்ந்துவிட்டது. திருமணஞ்சேரி, அஞ்சலாற்றங்கரை பகுதியில் செல்வம் என்பவரது 25 ஏக்கர் வயலில் நட்ட இந்த ஆர்.என்.ஆர் எனப்படும் சன்ன ரகமானது பாதி அளவிற்கு கதிர் முற்றிய நிலையில் ஒரு சில இடங்களில் சாய்ந்துள்ளது. இந்த புதிய ரக ஆர்.என்.ஆர். நெல் ரகம் ஈரப்பதம் எவ்வளவு இருந்தாலும் பரவாயில்லை, கிலோ ரூ.21 என்ற விலைக்கு வாங்குவதற்காக அறுவடை செய்த வயலுக்கே தனியார் வியாபாரிகள் வந்துவிடுவார்கள். தமிழகத்திலும் ஒரு சில அரிசிக் கடைகளில் கிலோ ரூ.100 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags : district ,Mayiladuthurai ,
× RELATED நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழை