×

வேதாரண்யம் வேதாமிர்தா ஏரியில் நந்தி மண்டபம் அமைக்கும் பணி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் துவக்கி வைத்தார்

வேதாரண்யம்,நவ.30: வேதாரண்யம் வேதாமிர்தா ஏரியில் கருங்கல்லில் நந்தி மண்டபம் அமைக்கும் பணியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் துவக்கி வைத்தார். வேதாரண்யம் வேதாமிர்த ஏரி 17 ஏக்கரில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் தூர்வாரப்பட்டு நிலையில் தற்போது முழுவதும் ஏரி தூர்வாரப்பட்டு உள்ளது. ராஜராஜ சோழன் காலத்தில் வெட்டப்பட்ட இந்த ஏரி நாள்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு பயன்பட்டு வருகிறது. தற்போது சுமார் ரூ.9 கோடி செலவில் ஏரியின் நான்குபுறமும் சுற்று சுவர் அமைத்து பூங்கா மற்றும் நடைப்பயிற்சிக்கான தளம் உள்ளிட்ட அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏரியின் மையப்பகுதியில் நந்தி மண்டபம் அமைக்கப்பட உள்ளது.

இந்த நந்தி மண்டபம் 27 அடி உயரத்தில் முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட உள்ளது. இதற்கான பணி நேற்று துவக்கப்பட்டது. இப்பணியினை அமைச்சர் ஓ.எஸ் மணியன், பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நந்தி மண்டபம் கட்டி முடிக்கப்பட்ட உடன் வரும் ஆண்டுகளில் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை பிரதோஷ நன்னாளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் ஏரியில் தெப்பம் விடப்படும். ஏரியின் நடுவில் கட்டப்பட்டு வரும் நந்தி மண்டபத்தில் உள்ள நந்திக்கு பிரதோஷ காலங்களில் அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் ஓ. எஸ். மணியன் தெரிவித்தார்.

Tags : OS Maniyan ,Nandi Mandapam ,Vedaranyam Vedamirtha Lake ,
× RELATED சட்டசபை தேர்தலில் மக்கள்...