×

வெங்கக்கல்பட்டியில் ரூ.4 லட்சம் மதிப்பில் தூர்வாரிய குளம் தொடர் மழையால் நிரம்பி வருவதால் மக்கள் மகிழ்ச்சி

கரூர், நவ. 30: தனியார் பங்களிப்புடன் ரூ. 4 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்ட வெங்கக்கல்பட்டி குளம் தொடர் மழையால் நிரம்பி வருவதால் பகுதியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கக்கல்பட்டியில் 1.75 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்த குளம் சரிவர தூர்வாரப்படாத நிலையில் இருந்தது. இதனால் குளத்துக்கு வரும் நீர்வழித்தடங்களும் தூர்ந்து போனதால் பல ஆண்டுகளாக இந்த குளத்துக்கு நீர்வரத்து இன்றி இருந்தது. இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முயற்சியால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் பொதுமக்களின் பங்களிப்புடன் குளம் தூர்வாரும் பணிகள் துவக்க திட்டமிடப்பட்டது.

இதன்படி, தனியார் பங்களிப்பாக ரூ. 4 லட்சம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரிடம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குளம் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், குளத்திற்கான நீர் வரத்தை அதிகரிக்கும் வகையில் நீர்வழித்தடங்களை தூர்வாருதல் போன்ற பணிகள் ரூ. 4லட்சம் மதிப்பில் நடைபெற்றது. இந்நிலையில் கரூரில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக வெங்கக்கல்பட்டி குளம் தற்போது நிரம்பி வருவதால் இந்த பகுதியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Rs ,
× RELATED கொரோனாவுக்கு உலக அளவில் 2,114,487 பேர் பலி