×

குப்பை கொட்டுவதை தடுக்கக்கோரி ராணிமகாராஜபுரம் மக்கள் சாலை மறியல்

திருச்செந்தூர், நவ. 30: திருச்செந்தூர் அருகே ராணிமகாராஜபுரம் பகுதியில் குப்பைகள்  கொட்டப்படுவதை கண்டித்தும், தடுக்க வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் அனைத்து குப்பைகளும்  ராணி மகாராஜபுரம் பகுதியில்  கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில்  உள்ள நன்செய் விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் அதில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் உயிரிழக்க நேரிடுகின்றன. மேலும் கிராம மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கிராமத்தினர்  ராணிமகாராஜபுரம் பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

அதேபோல் இனிமேல் இந்த பகுதியில் குப்பைகளை கொட்டக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழர் கழகம் சார்பில், மாநில பொது செயலாளர் சரவணன் தலைமையில், இளைஞர் அணி மாவட்டத் தலைவர் நாராயணன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்கள், வழக்கம்போல் குப்பை கொட்ட வந்த திருச்செந்தூர் பேரூராட்சி வாகனத்தை மறித்து போராட்டம் நடத்தினர். தகவலறிந்து விரைந்து சென்ற தாலுகா எஸ்ஐ ஸ்டீபன், பேரூராட்சி அலுவலர் பாண்டி உள்ளிட்டோர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிமேல் இந்த பகுதியில் குப்பைகளை கொட்ட மாட்டோம்; ஏற்கனவே கொட்டிய குப்பைகளை சரிசெய்து தருவதாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதை
யடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

Tags : road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...