×

நெல்லையப்பர் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா சொக்கப்பனை தீபம் ஏற்றல்

நெல்லை, நவ. 30: திருக்கார்த்திகை திருநாளையொட்டி நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் சொக்கப்பனை முக்கில் சுமார் 21 அடி உயரத்தில் தீபம் ஏற்றப்பட்டது. தமிழகத்தில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்தாண்டு கடந்த 16ம் தேதி கார்த்திகை மாதம் பிறந்தது. அன்று முதல் தினமும் வீட்டு வாசலில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி வந்தனர். கார்த்திகை மாதத்தின் முக்கிய நாளான திருக்கார்த்திகை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. திருக்கார்த்திகை தீப விழாவை யொட்டி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் சுவாமி சன்னதி நந்தி சிலை முன்பு, அணையா தீபமாக பரணி தீபம் நேற்று முன்தினம் இரவு ஏற்றப்பட்டது.
இதனையடுத்து இந்த பரணி தீபம் நேற்றிரவு 6.15 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி சன்னதி தெருவிலுள்ள சொக்கப்பனை முக்கிற்கு கொண்டு வரப்பட்டது. சுமார் 21 அடி உயரமுள்ள சொக்கப்பனையில் தீபம் ஏற்றப்பட்டது.
சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இதனையடுத்து அம்பாள் சன்னதி தெருவிலுள்ள முக்கில் ருத்ர தீபம் (சொக்கப்பனை தீபம்) ஏற்றபட்டது. இதில் பக்தர்கள் பங்கேற்றனர். இதுபோல் பாளை திரிபுராந்தீஸ்வரர் கோயில், நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோயில், தச்சநல்லூர் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில், குறிச்சி சொக்கநாதர் கோயில், கொக்கிரகுளம் காசிவிஸ்வநாதர் கோயில், வண்ணார் பேட்டை அருணாசலேஸ்வரர் கோயில், சிந்துபூந்துறை சிவன் கோயில், பாளையஞ் சாலைக்குமார சுவாமி கோயில், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில், மேலவாசல் முருகன் கோயில் உள்ளிட்ட சிவன், அம்பாள் மற்றும் முருகன் கோயில்களில் சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு வாசலில் கோலமிட்டு தீபங்கள் ஏற்றி பிரார்த்தனை நடத்தினர்.

Tags : Thirukarthikai Festival Chokappana ,Nellaiyappar Temple ,
× RELATED தி.மு.க. மக்கள் கிராம சபை மூலம் 9 ஆண்டுகால தெருவிளக்கு பிரச்னைக்கு தீர்வு