×

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்களை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் திமுக மாவட்ட செயலாளர்கள் கலெக்டரிடம் மனு

விருதுநகர், நவ 27: விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் சேர்க்கை, நீக்கலுக்காக நடக்கும் சிறப்பு முகாம்களை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என மாவட்ட திமுக சார்பில் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.விருதுநகர் மாவட்ட திமுக செயலாளர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ, தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ தலைமையில் எம்.எல்.ஏக்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், தென்காசி எம்.பி தனுஷ்.எம்.குமார் ஆகியோர் விருதுநகரில் கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:வாக்காளர் சேர்க்கை, நீக்கலுக்காக விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 21, 22ம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடந்த சிறப்பு முகாம்களில், திமுக வாக்குச்சாவடி பாகநிலை முகவர்கள் பணியாற்றினர். இதில்,ஒரு சில வாக்குச்சாவடிகளில் நிலை அலுவலர் வரவில்லை. நீக்கல் படிவம் யாருக்கும் வழங்கப்படவில்லை.
புதிதாக வாக்காளராக சேர்வதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படவில்லை. இறந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க செய்ய, திமுக முகவர்கள் எழுதிக் கொடுத்ததை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளுக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பெயர் மற்றும் செல்போன் பட்டியல் வழங்கப்படவில்லை. எனவே, வருகிற டிச.12, 13ம் தேதிகளில் நடக்க உள்ள சிறப்பு முகாமில் எங்களது வாக்குச்சாவடி முகவர்கள் வழங்கும் இறந்தவர் பட்டியலை, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மூலம் நேரடியாக விசாரித்து, இறுதி வாக்காளர் பட்டியலில் இறந்தோரின் பெயர்களை நீக்கவும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பட்டியலை எங்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். விண்ணப்பங்கள் 6,7,8, 8A கேட்பவர்களுக்கு வழங்கவும், பூர்த்தி செய்து கொடுப்பவர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும். மேலும் இறந்தவர்களின் விவரம் சம்மந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் (தலையாரி) ஆகியோர் நன்கு அறிவர். எனவே, வாக்குச்சாவடி நிலை அலுவர்களே இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்கள், வெளியூரில் குடியேறியவர்களை நீக்கம் செய்வதற்கு தேர்தல் ஆணைய அளவுகோல்படி இல்லாமல், வாக்குச்சாவடி பாகநிலை முகவர்களே வழங்கக்கூடிய பட்டியலை ஆய்வு செய்து, அனைத்தையும் நீக்கம் செய்ய வேண்டும்’ என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : DMK ,District Secretaries Collector ,voter registration camps ,Virudhunagar district ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி