×

பயிர்காப்பீட்டு திட்டம் குறித்து கலைக்குழுவினர் விழிப்புணர்வு

பரமக்குடி, நவ.27:  பரமக்குடி வட்டார வேளாண்மை துறை சார்பாக பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்டம் வேளாண்மை துறை சார்பாக, திருத்தி அமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் ராபி பருவம் 2020-21 திட்டத்தின் மூலம் செயல்படுத்த, வேளாண்மை காப்பீட்டு நிறுவனத்திற்கு மத்திய அரசு ஆணை வழங்கியுள்ளது. இந்த பயிர்காப்பீடு திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்கலாம். அறிவிக்கை செய்யப்பட்ட வருவாய் கிராமத்தில் 75 சதவீதத்துக்கு மேல் பயிர் விதைக்க இயலாமலும், நடவு பொய்த்தாலோ, முளைக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டாலோ, மாவட்ட அளவிலான பயிர்காப்பீடு கண்காணிப்பு குழு மூலமாக பரிந்துரை வழங்கப்பட்டு, பின்னர், பயிர் காப்பீட்டுத் தொகையின் மொத்த மதிப்பீட்டில் 25 சதவீதம் இழப்பீடு வழங்கப்படுகிறது. தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில், வறட்சி, வெள்ளம், தொடர் மழை, தொடர் வறண்ட தினங்கள் போன்றவற்றின் மூலம் ஏற்படும் பாதிப்புக்கு, அறிவிக்க செய்யப்பட்ட வருவாய் கிராமத்தில் உத்தரவாக மகசூல் அடிப்படையில் உரிய காப்பீடு வழங்கப்படும். விவசாயிகள்  பீரீமியத் தொகையாக நெல் சம்பா பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.252.06 செலுத்தி காப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

பயிர்காப்பீடு செய்யும் விவவசாயிகள் விண்ணப்பத்துடன், உறுதிமொழி படிவம், ஆதார் கார்டு நகல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் மூவிதல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், ரத்து செய்யப்பட்ட காசோலை 1 ஆகியவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பொது சேவை மையங்கள், விவசாயிகளின் வங்கிக் கணக்கு உள்ள பொதுவுடைமை வங்கிகளை தொடர்பு கொண்டு பிரீமியம் செலுத்தி பயிர்காப்பீடு செய்து கொள்ளலாம். கடைசி நாள் 30-11-20 என வேளாண்மைத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பரமக்குடி பேருந்து நிலையத்தில் வேளாண்மைகலை குழுவைச் சேர்ந்தவர்கள் திருத்தப்பட்ட பயிர்காப்பீடு குறித்து கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில், துணை இயக்குனர் கண்ணையா, பரமக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Tags : art group ,
× RELATED மாணவர்களுக்கு விழிப்புணர்வு