வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் மதுரையில் கைது

மதுரை, நவ. 27: வழக்கில் இருந்து மூவரை விடுவிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதுரை செக்கானூரணி இன்ஸ்பெக்டர் அனிதாவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள இடையமலைப்பட்டியைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகன் மாரி மற்றும் உறவினர் கமல் மற்றும் நல்லதம்பி ஆகியோர் மீது கடந்த 2017ம் ஆண்டு மதுரை செக்கானூரணி காவல்நிலையத்தில் மோதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கிலிருந்து இவர்களது பெயர்களையும், குற்றப்பத்திரிகையிலிருந்தும் நீக்கம் செய்வதற்காக ரூ.80 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என செக்கானூரணி இன்ஸ்பெக்டர் அனிதா கேட்டுள்ளார். அவ்வளவு தொகை உடனே தர முடியாது என்று நல்லதம்பி கூறியுள்ளார். எனவே, இரண்டு தவணையாக பணத்தை தரச்சொல்லியுள்ளார்.

இதுகுறித்து மாரியின் தந்தை நல்லதம்பி, லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஏற்பாட்டின் பேரில், நேற்று அனிதாவிடம் முதற்கட்டமாக ரசாயனம் தடவிய 40 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை லஞ்சமாக நல்லதம்பி கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அனிதாவை கைது செய்தனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: